2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் வேதியியல் பாட வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து பியூ கல்வித் துறை அதிகாரிகள் 2 பேர் உள்பட 22 பேரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 21-ஆம் தேதி நடைபெற்ற வேதியியல் பாட தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து,அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மார்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், மார்ச் 31-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதால் அந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு, ஏப்.12-ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்த விவகாரம் கர்நாடக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பியூ கல்வித் துறை அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சிஐடியின் டிஐஜி சோனியா நாரங்க் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் காவல் கண்காணிப்பாளர் மார்ட்டீன் உள்ளிட்டோர்இடம் பெற்றுள்ளனர்.
10 நாள்களுக்குள் 2 முறை வினாத்தாள் கசிந்துள்ளது குறித்து விசாரித்து வரும் இந்தக் குழுவினர், தும்கூரில் பியூ கல்வித் துறையைச் சேர்ந்த 2 உயரதிகாரிகளை வெள்ளிக்கிழமை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில், மேலும் 20 பேரிடம் வெள்ளிக்கிழமை சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறும் சிஐடி வட்டாரங்கள், 22 பேரையும் ரகசியமாக வைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.வினாத்தாள் கசிந்துள்ள விவகாரத்தில் தொடர்புடைய பியூ கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் பின்னணி உள்ளதையும் சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பதவி ராஜிநாமா?
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறியது:2-ஆம் ஆண்டு பியூசி வேதியியல் பாட வினாத்தாள் கசிந்துள்ளது வேதனை அளிக்கிறது. இதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன நெருக்கடியை புரிந்துள்ளேன். ஏப்.12-ஆம் தேதி நடக்கவிருக்கும் வேதியியல் பாட மறு தேர்வின் போது வினாத்தாள் கசியாமல் இருக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒருவேளை வினாத்தாள் மீண்டும் கசிந்தால் எனது பதவியை ராஜிநாமா செய்வேன். பியூசி கல்வித் துறை திருத்தியமைக்கப்படும். வினாத்தாள் கசிய காரணமானவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment