Pages

Friday, April 29, 2016

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை


பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.


தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.

காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.

‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.

‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.

விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.

இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:

கணினிமயம்

பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.

21 நாட்கள்

காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.

ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment