நிதியாண்டின் துவக்கம் நிதி திட்டமிடலை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள சரியான தருணமாக கருதப்படுகிறது. இந்த நிதியாண்டிற்கான நிதி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
வட்டி விகித குறைப்பு, வட்டி விகித கணக்கீடு முறையில் மாற்றம் என புதிய நிதியாண்டு மாற்றங்களுடன் பிறந்திருக்கிறது. இதற்கு முன்னர் சிறுசேமிப்பிற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உங்களின் சேமிப்பு, முதலீடு இரண்டிலுமே தாக்கத்தை செலுத்தும் நிலையில் நிதி திட்டமிடலை ஆய்வு செய்வதற்கான சரியான தருணமாக இது அமைகிறது. வட்டி குறைப்பு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ள சூழலில் சேமிப்பு மற்றும் டிபாசிட் மீதான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. இந்த பின்னணியில் ஒருவர் தனது நிதி இலக்குகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதோடு புதிய இலக்குகள் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
வரி திட்டமிடல்வரி திட்டமிடல் காலம் இப்போது தான் முடிந்த நிலையில் அதற்குள் மீண்டும் வரி திட்டமிடலா என பலரும் நினைக்கலாம். ஆனால், வரி திட்டமிடலை நிதியாண்டின் கடைசி பகுதிக்கு கொண்டு செல்வதை விட துவக்கத்திலேயே திட்டமிடுவது ஏற்றதாக இருக்கும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். வருமான வரி விலக்கிற்கான 80வது சி பிரிவின் கீழ் முதலீடுகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று திட்டமிட வேண்டும்.துவக்கத்திலேயே இவற்றை செய்வதன் மூலம், கடைசி நேரத்தில் அல்லாடுவதை தவிர்ப்பதோடு, முதலீட்டிற்கான பலனை ஆண்டு முழுவதும் பெறுவதும் சாத்தியமாகும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் வரிச்சலுகைக்காக தவறான முதலீட்டை மேற்கொள்வதையும் இதன் மூலம் தவிர்க்கலாம். அதே போலவே வரி தொடர்பான ஆவணங்களையும் சேகரித்து வைப்பது நல்லது. வீட்டுக்கடன் வட்டிக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்று வைக்கலாம்.
முதலீட்டில் மாற்றம்நிதி முதலீடுகள் பரவலாக இருப்பது மிகவும் அவசியம். ஆனால், பல முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட ஒரு நிதி சாதனத்தில் பெரும்பாலான தொகையை முதலீடு செய்யும் பழக்கம் கொண்டுள்ளனர். எனவே, முதலீட்டை ஆய்வு செய்து தேவைக்கேற்ப அவற்றை பரவலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல வாய்ப்பிருந்தால் முதலீட்டை அதிகமாக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஊதிய உயர்வு எதிர்நோக்கி இருப்பவர்கள் அதிகரிக்கும் சம்பளத்திற்கு ஏற்ப சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகமாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பத்திரங்கள்அண்மையில் சிறு சேமிப்பிற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது மற்றும் இவற்றின் வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட உள்ளது ஆகியவை சிறுசேமிப்பு திட்டங்களை நாடும் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், கடன் பத்திரங்கள் மற்றும் பிபிஎப் திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்பவர்களை அதை தொடர வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். இவை வரி விலக்குடன் பலன் அளிப்பதே இதற்கு காரணம் என்கின்றனர். தேசிய பென்சன் திட்டத்தில் ரு.50,000 முதலீடு செய்வதும் ஏற்றதாக இருக்கும். வாய்ப்புள்ளவர்கள் வரி இல்லா பத்திரங்களில் முதலீடு செய்வதையும் பரிசீலிக்கலாம். ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் நிறுவன டிபாசிட் திட்டங்களை பரிசீலிக்கலாம். கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பரவலாக்கில் கவனம் செலுத்துபவர்கள் அரசின் தங்க பத்திரம் மூலம் முதலீடு செய்வதையும் பரிசீலிக்கலாம்.
காப்பீடுநிதி திட்டமிடலில் எப்போதும் காப்பீட்டிற்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும். காப்பீடு பாதுகாப்பு போதுமானதாக இருக்கிறதா என பரிசீலிக்க வேண்டும். ஆயுள் காப்பீடு தவிர மருத்துவ காப்பீட்டில் மேம்பாடு தேவையா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல வீட்டு காப்பீடு பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.வளமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு நிதி திட்டமிடல் மிகவும் அவசியம். நிதியாண்டின் துவக்கத்தில் இதை மேற்கொள்வது பொருத்தமாகவும் இருக்கும். தேவையான மாற்றங்களை செய்யவும் இது கைகொடுக்கும்.
No comments:
Post a Comment