மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தையும், அரசு பொறியியல் கல்லுாரி 49வது இடத்தையும் பிடித்துள்ளதால், இந்தாண்டு விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம், சிறந்த கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக 'ரேங்கிங்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக என்.ஆர்.ஐ.எப்.,தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டது.
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த ரேங்கிங் பட்டியலில் இடம் பெறுவதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் வரை விண்ணப்பங்களை அனுப்பி இருந்தன.
இந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லுாரிகள், மேலாண்மை, பார்மஸி நிறுவனங்கள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டன.
விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களின் கற்றல் வளம், ஆராய்ச்சி தளம், வெளியே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, புலக்காட்சி, பரவலாக்கல் உள்ளடக்கம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் தலா 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.
பல்கலைக்கழக பிரிவில் பெங்களூரூ இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் 91.81 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தது. மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி இரண்டாமிடம், புதுடில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மூன்றாமிடம் பிடித்தன.
இந்த பிரிவில் ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் 100க்கு 74.44 மதிப்பெண்ணை பெற்ற புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
பொறியியல் கல்வி நிறுவனங்கள் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம்,
மும்பை ஐ.ஐ.டி., இரண்டாமிடம், காரக்பூர் ஐ.ஐ.டி., மூன்றாமிடம் பிடித்தன. இந்த பட்டியலில் 58.79 மதிப்பெண்களுடன் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி 49வது இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த நிறுவனமாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் திகழ்ந்த போதிலும், துணைவேந்தர் மாற்றம், மாணவர்களின் தொடர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளால் நிர்வாகம் ஸ்தம்பித்து இருந்தது. வகுப்புகளும் நடக்கவில்லை.
ஆனால், இந்த தடைகளை தாண்டி தேசிய அளவில் 13வது இடத்தை பிடித்து சாதித்து இருப்பதால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல், தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற அனுமதி கிடைத்துள்ள சூழ்நிலையில், சிறந்த பொறியியல் கல்லுாரி நிறுவனமாக புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கை விரைவில் துவங்கவுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய தர மதிப்பீட்டில் இடம் பிடித்துள்ளதால் இந்தாண்டு பிற மாநிலங்களிலிருந்தும் மாணவர் சேர்க்கைக்கு பல மடங்கு விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment