பி.எப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
தொழிலாளர்கள் தங்களின் பி.எப். கணக்கில் உள்ள தொகையில் இருந்து தங்களின் தேவைக்கு ஏற்ப வீடு கட்டுதல், மருத்துவ செலவு, திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகியபின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.
இந்நிலையில் தொழிலாளர்கள் நலன் கருதி வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி தொழிலாளர் வைப்பு நிதி தொகையில் இருந்து நூறு சதவீதம் தொகையை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 58 வயது நிரம்பிய தொழிலாளர்கள் மட்டுமே பி.எப்-ல் இருந்து நிறுவனத்தின் பங்களிப்பு தொகையை எடுக்க முடியும். ஏதாவது காரணத்திற்காக 58 வயதுக்குள் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று விட்டால், அவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வைப்பு நிதியை மட்டுமே பெற முடியும்.
இதற்கு தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இனால் ஏப்ரல் 30-ம் தேதி வரை புதிய பி.எப் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மே 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிந்து மே 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை கைவிடக் கோரி நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த இரண்டு பெங்களூரில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பணத்தை மொத்தமாக எடுப்பதில் விதிக்கப்பட இருந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அறிவிக்கை 3 மாதத்திற்கு அதாவது ஜூலை 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறினார். மேலும், இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி ஆலோசனை நடத்திய பின்னர், பி.எப். பணத்தை எடுப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார். பி.எப். பணத்தை கையாள்வதில் பழைய நடைமுறையே தொடரும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment