Pages

Monday, April 18, 2016

கல்வித் தரத்தை முன்னேற்ற வழிகாட்டுமா கட்சிகள்?


தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பது நீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும். கல்விக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது, கோத்தாரி குழு தெரிவித்த கருத்தாகும்.கல்வியில் கேரளாவும், தமிழகமும் முன்னிற்கின்றன. உயர்நிலைக் கல்வியில் ஆந்திரா முன்னிற்கிறது. இந்தப் பின்னணியில், சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு தரும் நடைமுறை கட்டாயமாகிறது. கல்வி என்பது மாநில அரசின் நிர்வாகப்பட்டியலில் வருவதால், மத்திய அரசால், கல்வித்திறனை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பையும் நிதி வசதிகளையும் மட்டுமே தரமுடியும்.



தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், இந்த விஷயத்தில், அ.தி.மு.க.,வைப் பொறுத்தளவில், 'சொன்ன அனைத்தையும் செய்ததாக' அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வரும் ஆன ஜெயலலிதா பேசி வருகிறார். ஆனால், உயர்கல்வியில் நாம் பின்தங்கி வருவதை, சில தகவல்கள் உணர்த்துகின்றன. ஆனால், பிளஸ் 2 வரை தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருக்கிறது; பெண்கள் கல்வி பயிலும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே சமயம், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் கல்வித் தரம், தமிழக அரசு பள்ளிகளில் இல்லை. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் பலர், தமிழில் பிழையின்றி எழுத, படிக்க முடியாத நிலை உள்ளது.

தனியார் பள்ளிகளும் கட்டணத்தை அதிகரிப்பதில் காட்டும் ஆர்வம் போல, அதிக தரம்மிக்க கல்வித் திட்டத்தை தரவில்லை என்ற கருத்து எழுந்திருக்கிறது.
இச்சூழ்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், வெளிப்படையாக, 'சமச்சீர் கல்வித்திட்டம் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு பாடத்திட்டம் மேம்படுத்தப்படும்; ஆசிரியர்கள் திறன் உயர்த்துதல், ஆங்கில உரையாடலை சரளமாகக் கொள்ள வழிவகை செய்தல் என்பதுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுத்தப்படும்' என்று கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு கட்சியான பா.ம.க., தேர்தல் அறிக்கையில், 'கேந்திரிய வித்யாலயா போல, தரம் உயர்த்துதல்; அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரேமாதிரியான பாடத்திட்டம், மாணவர்கள் புத்தகப்பை சுமையைக் குறைக்க கையடக்க கணினிகள்' என்று பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.பா.ஜ., கட்சி தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு திட்டங்களை இணைத்து தகவல் தரலாம்.

இச்சூழ்நிலையில், 'எத்தனை மாணவர்கள் வந்தாலும், அரசு பள்ளிகளில், சேர்க்கைக்கு இந்த ஆண்டில் இடம் உள்ளது' என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார். 10ம் தேர்வில், 11 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், இத்தகவல் வந்திருக்கிறது.

அதிலும், அவர் சென்னையில் உள்ள அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி சேர்க்கைக்கு போட்டி அதிகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். தனியார் பள்ளிகளை விட கட்டமைப்பு, கல்வித்தரம் வசதியாக இருப்பதால், இப்போட்டி என்பது தான் அதற்கான அர்த்தம்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு, காலணி, சீருடைகள் உட்பட, 14 வகைப் பொருட்கள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அசோக் நகர் பள்ளியில், 3,000க்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர்.

இயற்கைச் சூழல் உள்ள இப்பள்ளியில், மரங்களில் இருந்து உதிரும் சருகுகளை அகற்ற, மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்த, அதிக செலவும், நிரந்தர பணியாளர்களும் தேவை. இவற்றை சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஆண்டுதோறும் தேவைப்படும் நிதியைத் திரட்ட, தாராள மனதுடைய தொழிலதிபர்கள் உதவியை ஏன் நாடக்கூடாது?
மாநிலத்தில் இம்மாதிரி பள்ளிகள் எத்தனை, அதை சீராக்கவும், சமச்சீர் கல்வியில் ஏற்பட்ட தொய்வை நீக்கவும் நிரந்தர வழி என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

தனியார் பள்ளிகளுடன் அடுத்த ஐந்து ஆண்டு களில், அரசு பள்ளிகள் போட்டியிட முடியுமா என்ற நிலையில், இத்தகவல்கள் வருகின்றன.அதே சமயம், தேர்தல் அறிக்கையில் கல்விக்கு அக்கறை காட்டும் கட்சிகள், புதிய சட்டசபையில், இவ்விஷயத்தில் எவ்வித வேற்றுமையும் இன்றி, 'திறன்அறி கல்வியை உருவாக்க' செயலாற்றுவதாக தங்கள் பரப்புரையில் உத்தரவாதம் தந்தால், அது புதுமையாக அமையும்.

No comments:

Post a Comment