புதுச்சேரியில் 7-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வுக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாளை விநியோகித்தனர். அதிகாரிகளின் குளறுபடியால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 7-ம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்களுக்கு கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டது. அதைப் பார்த்த மாணவர்கள், இது 7-ம் வகுப்பு கேள்வித்தாள் அல்ல என்று தேர்வு மேற்பார்வை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கேள்வித்தாளை பார்த்த ஆசிரியர்கள், உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வு செய்ததில், 9-ம் வகுப்புக்கான கேள்விகள் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.
இதுபற்றி மாணவர்கள் தரப்பில் கூறுகையில், “தேர்வுகள் 21ம்தேதி (இன்று) முடிவடைய இருந்தது. தற்போது இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வரும் 22ம்தேதி (நாளை) நடக்கும் என்று பள்ளியில் அறிவித்தனர்” என்று குறிப்பிட்டனர்.
ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “கல்வித்துறை அதிகாரிகள் தவறுதான் இதற்கு காரணம். கேள்வித்தாளைக் கூட சரிபார்த்து பள்ளிகளுக்கு விநியோகிப்பதில்லை” என்று குற்றம் சாட்டினர்.
பள்ளி உயர்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: அச்சகத் துறையிலிருந்து தவறாக அச்சிடப்பட்டு கேள்வித்தாள் வந்துள்ளது. அதை அப்படியே சரிபார்க்காமல் தந்ததால் இந்த தவறு நடந்துள்ளது. சம்பவத்துக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கிறோம். தேர்வை ஒத்திவைத்து விட்டோம். 22ம்தேதி (நாளை) இத்தேர்வு நடக்கும், என்றனர்.
No comments:
Post a Comment