அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர். கல்வி ஆண்டின் இறுதியில், தங்கள் பிள்ளைகள், பொதுத்தேர்வு அல்லது கல்லுாரி தேர்வு எழுத பயிற்சி தர வேண்டும்; குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளியூரில் உள்ள சொத்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனக்கூறி, மாதக் கணக்கில் விடுப்பு எடுக்கின்றனர். பல நேரங்களில், மருத்துவ விடுப்பாக இதற்கு அனுமதி பெறுகின்றனர்.
சிலர் கடிதம் மட்டும் கொடுத்து விட்டு, அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து விடுகின்றனர்; வீடு, முகவரி மற்றும் போன் எண் வரை மாற்றி விட்டு செல்கின்றனர். இப்படி மாயமாகும் பலர் தனியார் நிறுவன பணி; வெளிநாட்டில் உயர்படிப்பு மற்றும் வெளிநாட்டு வேலைக்கு செல்வது உண்டு.
பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த பணி முடிந்ததும், மீண்டும் அரசு பணியில் சேர முயற்சிக்கின்றனர். சில ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் விடுப்பு எடுத்து விட்டு, திடீரென மீண்டும் பணி கேட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, நீண்ட நாள் வேலைக்கு வராமல், விடுப்பில் உள்ளோரின் பட்டியலை அனுப்பும்படி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். இதில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிக்குவர் என, தெரிகிறது.
No comments:
Post a Comment