தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்தால், நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அத்துடன் தங்களது தாய்மொழியை படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறுபான்மை மொழி மாணவ, மாணவியரை அவர்களது தாய் மொழியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து, பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் கொடுத்த, 7,000 மாணவ, மாணவியரை, அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி அளித்தது. இந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவில்லை.இதை கண்டித்து, சிறுபான்மை மொழிகளின் கூட்டமைப்பு சார்பில், நாளை (பிப். 18) சென்னையில் போராட்டம் நடத்துவது என, கடந்த, 14ம் தேதி, ஓசூர் ஆந்திரசமிதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு தமிழ் தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, மார்ச், 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குனரகம், ஏற்கனவேசென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது போல், பள்ளிக்கல்வித்துறையிடம், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த சிறுபான்மைமொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் தேர்வு எழுத விலக்கு அளித்துள்ளது. இதற்கான உத்தரவு ஆணை நேற்று கிடைக்க பெற்றது. இதை சிறுபான்மையின கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
No comments:
Post a Comment