Pages

Friday, February 19, 2016

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் 8-வது நாளாக போராட்டம்:

தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேர் கைது
அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது. சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.


புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது, அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது.

மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, ஓய்வூதியத்துறை, புள்ளியியல் துறை உட்பட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் அரசு ஊழியர்கள் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பினர். பின்னர், அரசு ஊழியர் சங்கத் துணைத்தலைவர் கே.எம்.தியாகராஜன் தலைமையில் 700-க்கும் மேற்பட்டோர் டிஎம்எஸ் வளாகத்தில் பேரணியாக சென்றனர். பேரணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

முன்னதாக, வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து அரசு ஊழியர்கள் சங்க துணைத் தலைவர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களின் 20 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை. அதன்பிறகே பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மாவட்ட அளவில் நடைபெற்று வந்த சாலைமறியல் போராட்டம் இன்று முதல் வட்டார அளவில் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர். அனைத்து அரசு துறை ஊழியர் சங்கங்களின் ஆதரவும் பெருகி வருகிறது. ஆசிரியர் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தொடரும்.

இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

மாநில அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார், பேரணியை தொடங்கிவைத்துப் பேசும்போது,“மத்திய அரசு புதிய பென்சன்திட்டத்தை 2004 முதல் கொண்டு வந்தது. ஆனால், தமிழக அரசு 2003-ம் ஆண்டே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. புதிய பென்சன் திட்டத்துக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்படும் தொகை எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. சிபிஎப் பணத்தை கையாள்வது தொடர்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்துடன் (பிஎப்ஆர்டிஏ) தமிழக அரசு இன்னும் ஒப்பந்தம்கூட போடவில்லை. புதிய பென்சன் திட்டத்தை இப்போது என்பிஎஸ் (புதிய ஓய்வூதிய திட்டம்) என்று சொல்கிறார்கள். என்பிஎஸ் என்றால் “நோ பென்சன்” என்று தான் அர்த்தம். அரசு ஊழியர்களுக்கு பாதமான இந்த புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு முன்பு இருந்துவந்த பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒரு லட்சம் பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment