Pages

Wednesday, February 17, 2016

ஏப்ரல் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு;

ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்
ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மார்ச் 11-ந்தேதி அரசிடம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்குகின்றனர்.


36 அம்ச கோரிக்கைகள்

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளரும், மத்திய அரசு ஊழியர்களின் தென்பகுதி கூட்டு போராட்ட குழுவின் தலைவருமான என்.கண்ணையா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை மாற்ற வேண்டும். ரெயில்வே, பாதுகாப்பு, தபால் உள்பட மத்திய அரசின் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை கைவிட வேண்டும் உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

வேலைநிறுத்தம் குறித்து கடந்த 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை எஸ்.ஆர்.எம்.யு. நடத்திய ரகசிய வாக்கெடுப்பில் 90.07 சதவீதம் ரெயில்வே ஊழியர்களும், அகில இந்திய அளவில் 95.6 சதவீதம் ரெயில்வே ஊழியர்களும் போராட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

45 லட்சம் ஊழியர்கள்

வேலைநிறுத்தம் தொடர்பாக மார்ச் 11-ந்தேதி ரெயில்வே ஊழியர்கள் அந்தந்த மண்டல பொதுமேலாளர்களிடமும், தபால், பாதுகாப்பு, வருமான வரி போன்ற பிற துறைகளை சேர்ந்த ஊழியர்கள் அந்தந்த துறை பொதுமேலாளர்கள், அதிகாரிகளிடம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்க உள்ளனர்.

அதன்பிறகும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திட்டமிட்டபடி ஏப்ரல் 11-ந்தேதி காலை 6 மணி முதல், இந்திய நாடே ஸ்தம்பிக்கும் வகையில் கடந்த 1974-ம் ஆண்டு 21 நாட்கள் நடத்திய போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இதில் நாடுமுழுவதும் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்ணையா பேட்டி அளித்தபோது, அவருடைய அறிவிப்பை கேட்பதற்காக எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் தெற்கு ரெயில்வே அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்தனர்.

No comments:

Post a Comment