அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை முழுமையாக அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும். அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.
பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்.1-ம் தேதி நிறைவு பெறுகிறது. 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்.13-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதையொட்டி அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி கூறியதாவது:
பொதுத் தேர்வுகள் நடைபெறும் மைய வளாகம் அலைபேசிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் யாரும் தங்களது அலைபேசியை தேர்வு மையத்துக்கு கொண்டுவரக் கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தாமே அடித்துவிடும் நிகழ்வு ஒழுங்கீனச் செயல் எனக் கருதப்படும். அக்குறிப்பிட்ட மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தப்படுவதுடன், அடுத்த இரு பருவங்களுக்கும் அவர் தேர்வு எழுத அனுதிக்கப்படமாட்டாது.
பிளஸ்-2 தமிழ், ஆங்கிலம் தேர்வுகளுக்கு 30 பக்க கோடுபோட்ட விடைத்தாள் வழங்கப்படும். உயிர் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு 22 பக்க விடைத்தாளும், கணினி அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்களுக்கான ஓ.எம்.ஆர். தாளும், அத்தோடு 30 பக்க விடைத்தாளும் வழங்கப்படும்.
கணக்குப் பதிவியல் பாடத் தேர்வு விடைத்தாளில் 1 முதல் 14 பக்கங்கள் கோடு போடாமலும், 15 முதல் 40-வது பக்கம் வரை கோடுபோட்ட விடைத்தாளும் வழங்கப்படும். மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் 38 பக்க விடைத் தாள்கள் வழங்கப்படும்.
விடைத்தாள் வழங்கப்படும் போது மாணவர்கள் பக்க எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.
குறிப்பிட்ட சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், "மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது" என்ற குறிப்பு ரையை பேனாவினால் எழுத வேண்டும். கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அ.புகழேந்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment