சென்னை ஐகோர்ட்டில், பாரிமுனையை சேர்ந்த வக்கீல் எ.ரங்கநாயகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலியல் கொடுமைகளை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளிக்கூடங்களில், பாலியல் கொடுமை குறித்து விளக்கம் அளிக்க உளவியல் நிபுணர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகார் செய்ய 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், அந்த தொலைபேசி எண் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர், தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை செயலர், தமிழக சமூக நலத்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் பதில் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று பலமுறை உத்தரவிட்டும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இதுவரை பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேநேரம், ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த ஜனவரி 17-ந் தேதியுடன் முடிந்துவிட்டது’ என்று கூறினார். எனவே, ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுந்த நபரை உடனடியாக நியமிக்கவேண்டும்.
மேலும், மனுதாரர் பாலியல் கல்வி உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு ஏன் அமல்படுத்தக்கூடாது? எனவே, இந்த பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதில் ஏதாவது தடை ஏற்பட்டால், இந்த ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, மேற்கொள்ளப்படாத நடவடிக்கை ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment