Pages

Monday, February 22, 2016

தேர்தல், தேர்வு நெருங்குவதால் அரசு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விடுபட்ட கோரிக்கைகளை வரைவு அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் அளிக்க உள்ளோம். இவற்றை அரசு தனது அரசாணையில் வெளியிட வேண்டும். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளனர்.


20 அம்ச கோரிக்கை

காலிப் பணியிடங்களை நிரப்புவது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். உண்ணாவிரதம், உள்ளிருப்பு, காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்களுக்கு 11 சலுகைகளை அறிவித்தார். இதுதொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:

போலியோ சொட்டு மருந்து முகாம், சட்டப்பேரவைத் தேர்தல், பொதுத் தேர்வு ஆகியவற்றையும் பொதுமக்களின் நலன், அரசின் நலனை கருத்தில்கொண்டு நல்லெண்ண அடிப்படையில் எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். விடுபட்ட கோரிக்கைகளை வரைவு அறிக்கையாக தயாரித்துள்ளோம். இதை தலைமைச் செயலாளரிடம் அளிக்க உள்ளோம். இவற்றை அரசு தனது அரசாணையில் வெளியிட வேண்டும்.

அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்வது குறித்து அரசிடம் இருந்து எவ்வித சுற்றறிக்கையும் வரவில்லை. அதேபோல, அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறையை கையாளவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வேலைகளை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் (இன்று) வார நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்தும் பணிகளை பூர்த்தி செய்வோம்.

இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறினார்.

No comments:

Post a Comment