Pages

Friday, April 8, 2016

தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு


சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுக்க கண், விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன் கூடிய 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்க உணவு துறை முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கின. ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக செயல்படுத்த முடிய வில்லை.


இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்குவதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.அரியலுார், பெரம்பலுாரில் முதலில் தரப்படும். இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க பொது மக்களிடம் இருந்து தனியாக விவரங்களை சேகரித்தால் தாமதம் ஏற்படும். தற்போது அதிகம் பேர் 'ஆதார்' அட்டை வாங்கி வருகின்றனர். எனவே அதன் நகலை வாங்கி, ரேஷன் கடைகளில் 'ஸ்கேன்' செய்து அந்த விவரங்கள் அடிப் படையில் 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனரோ, அவர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகலும் வாங்கப்படும். ஆதார் அட்டையில் இல்லாத விவரம் மக்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும். இந்த பணி தேர்தல் முடிந்ததும் துவங்கப்படும். முதல் கட்டமாக ஜூலை மாதம் அரியலுார், பெரம்பலுாரில் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment