Pages

Thursday, April 7, 2016

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு ஒரே நாளில் இரு தேர்வு!


ஓசூர் கல்வி மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஒரே நாளில், இரு தேர்வுகள் நடந்ததால், மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்தனர். இதனால், பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த, 2006ம் ஆண்டு ஜூன் மாதம், 12ம் தேதி அமல்படுத்தப்பட்ட தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், 2006ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்த, தெலுங்கு, கன்னட, உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி வரும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையுள்ள சிறுபான்மை மொழி மாணவ, மாணவியர், அவரவர் தாய் மொழியுடன் சேர்ந்து, தமிழ் மொழி தேர்வும் கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை, 10 மணியளவில், ஓசூர் கல்வி மாவட்டத்தில் படிக்கும், 6, 7, 8 மற்றும் ஒன்பதாம் வகுப்பு தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது மொழி மாணவ, மாணவியருக்கு தேர்வு நடந்தது. இதில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், அவரவர் தாய் மொழி தேர்வு மட்டும் எழுதினர்.

தமிழ் மொழி தேர்வுக்கு இடையே ஒரு சில நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், 9ம் வகுப்பு மாணவ, மாணவியர், 4 ஆயிரம் பேருக்கு, காலையில் தாய் மொழி தேர்வும், மதியம் தமிழ் தேர்வும் நடந்தது.

ஒரே நாளில், இரு தேர்வுகள் நடந்ததால், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர். இது பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment