Pages

Saturday, April 9, 2016

பள்ளி பஸ் விதிமுறைகள் அமலாவதில் என்ன பிரச்னை?


பள்ளி பஸ்களுக்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வு என்ன என்பதை, பள்ளிகள் தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள சியோன் பள்ளி பஸ்சில் உள்ள ஓட்டை வழியாக, சிறுமி கீழே விழுந்து பலியான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது; 2012 ஜூலையில் சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி பஸ்களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வரும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய விதிமுறைகளை தமிழக அரசு கொண்டு வந்தது.



விதிகள் சிலவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் மற்றும் பள்ளிகள் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவு:

விதிகளை அமல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பெரிய அளவிலான பிரச்னைகள் என்ன என்பதையும், அதற்கான தீர்வையும், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும். அப்போது தான், அரசிடம் அது குறித்து பட்டியலிட முடியும். விசாரணை, ஏப்., 20க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


சட்டத்திற்கு முரணானவை

தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:

● பஸ்களில் படிக்கட்டின் உயரம் குறைவாக இருந்தால், வேகத் தடை உள்ள இடங்களில் இடிபடும்

● டிரைவர் இருக்கும் இடத்தை, தனி அறை போல் பிரிக்க வேண்டும் என கூறுவது சரியல்ல; பஸ்சில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக செல்ல இயலாது

● பஸ்சின் பின்புறத்தில் அவசர வழி ஏற்படுத்துவதும், பாதுகாப்பாக இருக்காது. பல விதிகள், சட்டத்துக்கு முரணாக உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment