Pages

Tuesday, April 5, 2016

மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

சென்னையில் நடந்து வரும், தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில் நேற்று, பிரபல கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் நம்பி உள்ளனர். ஆனால், மற்ற மாநில மாணவர்கள், நுாற்றுக்கணக்கான படிப்புகளை தேர்வு செய்து, அதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம் எளிதாக, உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.


எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் பார்க்காமல், நுழைவுத் தேர்வுகளை எழுத கற்றுக் கொள்ளுங்கள். பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் இருந்தால் கூட, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., உட்பட பல தொழில் படிப்புகளை படிக்கலாம்.

அதற்கு, ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதே போல், தமிழகத்தில் நாம் படிப்பது வெறும் மனப்பாடக் கல்வி; அதைத் தாண்டி எவ்வளவோ உள்ளன. ஆராய்ச்சி, பகுத்தறிந்து படிப்பது, சிந்திக்கும் திறனை ஊக்குவித்து படிப்பது என்பது தான், உயர்கல்வியிலும், உங்கள் வாழ்விலும் கைகொடுக்கும்.

நுழைவுத் தேர்வுகளில், ஜே.இ.இ., - யு.சி.இ.இ.டி., - என்.ஏ.டி.ஏ., - ஏ.ஐ.பி.எம்.டி., என, 80க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் பெரும்பாலான தேர்வுகளை, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் எழுத வேண்டும்.

பிளஸ் 2 படிக்க துவங்கும் போதே, இந்த நுழைவுத் தேர்வுகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவற்றுக்கு விண்ணப்பித்து, முன்கூட்டியே தயாராக வேண்டும். இன்ஜி., படிப்புகளைத் தாண்டி, வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்பு தரும் ஏராளமான படிப்புகள் உள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலை கவுன்சிலிங்கிலும், மருத்துவக் கவுன்சிலிங்கிலும் இடம் கிடைக்காத அளவுக்கு மதிப்பெண் குறைந்தவர்கள் கூட, மற்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்று பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர்

எனவே, பிளஸ் 2 படிக்கும் முன், உங்களுக்கான இலக்கு எது; என்ன படிப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், இலக்கு இல்லாத கால்பந்து விளையாட்டை, இரண்டு ஆண்டு விளையாடி விட்டு, கடைசியில், கோல் கம்பம் எங்கே என தேடும் நிலை தான் ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment