வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியினை கலெக்டர் நந்தகோபால் நேரில் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், வாக்குப் பெட்டியை சுற்றிலும் வைக்கப்படும் அட்டைகள், கோந்து, வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கு உள்பட அனைத்து பொருட்களையும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தது. தேர்தல் ஆணையத்தால் வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த அனைத்து பொருட்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காயிதே மில்லத் அரங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்புடன் வைக்க லாரிகளில் ஏற்றப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணியினை கலெக்டர் நந்தகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:–
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 439 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இங்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏற்ப சாய்தள வசதி ஆகியவை உள்ளதா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தலின் போது வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தற்போது லாரி மூலம் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் தாசில்தார் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment