காரைக்குடி: அங்கன்வாடி மையங்கள் 'ஜீரோ பேலன்சில்' வங்கி கணக்கு துவக்க முடியாததால் மானியமின்றி கூடுதல் விலையில் காஸ் சிலிண்டர்கள் பெற்று வருகின்றனர்.அங்கன்வாடி மையங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட காஸ் ஏஜன்சி மூலம் ஆண்டுக்கு நான்கு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
அங்கன்வாடியை பொறுத்தவரை காஸ் இணைப்புடன் ஒரே ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை இவர்கள் காஸ் ஏஜன்சியில் பதிவு செய்து சிலிண்டரை பெற்று கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விறகு வைத்து எரிக்க கூடாது, என்ற நிபந்தனை உள்ளது.மாற்று சிலிண்டர் இல்லாததால் அங்கன்வாடி பொறுப்பாளர்கள் சிலிண்டர் தீர்ந்த பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்த 10 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் கிடைக்கிறது. இடை பட்ட நாட்களில் அருகில் உள்ள மையங்கள் மூலமும், மண்ணெண்ணெய் ஸ்டவ் மூலமும் சமைக்க வேண்டும்..
தற்போது அங்கன்வாடிகளின் பெயரில் வங்கி கணக்கு துவங்கி,அதை ஏஜன்சியில் கொடுத்து எரிவாயு சிலிண்டர் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. மானிய தொகையை கழித்து மீதம் உள்ள தொகை, குழந்தைகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். வங்கிகள் 'ஜீரோ பேலன்சில்' கணக்கு துவங்க அனுமதிப்பது இல்லை. இதனால் பல அங்கன்வாடி மையங்களில் வங்கி கணக்கு இன்னமும் துவக்கப்படாமல் உள்ளது.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில செயலாளர் வாசுகி கூறும்போது: எரிவாயு சிலிண்டர் பெறும்போது, அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட கூடுதலாக ரூ.30 முதல் 50 வரை சப்ளை செய்பவருக்கு கொடுக்க வேண்டும். இத்தொகையை நீண்ட காலமாக அங்கன்வாடி பணியாளர்களே செலுத்தி வருகிறோம். நேரடி மானியத்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள், 'ஹெட்மிஸஸ், இன்சார்ஜ், அங்கன்வாடி சென்டர்' என்ற பெயரில் கணக்கு துவக்க ஐ.ஓ.சி., அனுமதி அளித்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் பொறுப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். தலைமை ஆசிரியை பொறுப்பு கிடையாது.
இதனால், வங்கி கணக்கு துவங்கினாலும் இந்த தொகையை எவ்வாறு பெறுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு துவக்க வங்கிகள் அனுமதி அளிப்பது இல்லை. மானிய தொகையை வங்கியிலும், மீத தொகையை அலுவலகத்திலும் வாங்க வேண்டியதுள்ளது. ஒரு சில இடங்களில் ஒரு பொறுப்பாளர் இரண்டு, மூன்று மையங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்கள் மூன்று மையத்திலிருந்து பெறும் சிலிண்டருக்கும் தங்கள் பணத்தை செலவழித்து வருகின்றனர்.
எனவே, எண்ணெய் நிறுவனங்கள் அங்கன்வாடி மையத்துக்கு விலக்கு அளித்து, பழைய முறையிலேயே காஸ் வழங்க வேண்டும். அல்லது, குழந்தைகள் வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் வங்கி கணக்கு துவக்கி அவர்களிடமிருந்து அங்கன்வாடி மையங்கள் பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment