மதுக்கடையை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
அரசுமேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையம் அருகில் மதுக்கடை உள்ளதால் கடையை மூட வேண்டும் என மனுதாரர் கோபிநாத் குறிப்பிட்டிருந்தார். இம்மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, மதுக்கடைக்கும் பள்ளிக்கும் இடையே 120 மீட்டர் தொலைவு உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்துக்கும் கூடுதலானது என அரசு வழக்குரைஞர் முனியசாமி தெரிவித்தார். இதை மனுதாரரின் வழக்குரைஞர் மலைக்கனி மறுத்தார். 57 மீட்டர் தான் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மதுக்கடை பகுதியை ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையராக ஜி.பகவத்சிங்கை நீதிபதிகள் நியமித்தனர். வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பகவத் சிங் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
மனுதாரரின் வழக்குரைஞர் மலைக்கனி, அரசு வழக்குரைஞர் முனியசாமி, வழக்குரைஞர் ஆணையர் ஜி.பகவத்சிங், விருதுநகர் டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். ஆணையரின் அறிக்கையில், பள்ளிக்கும் மதுக்கடைக்கும் இடையில் 58.5 மீட்டர் தூரம் தான் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மதுக்கடையை அமைக்கும் போது தூரம் எப்படி அளவிடப்பட்டது என அரசுத்தரப்பில் நீதிபதிகள் விளக்கம் கோரினர்.
அதற்கு, பள்ளியின் சுற்றுச்சுவர் முனையில் இருந்து அளவிடும்போது இந்த தூரம் வரும், நுழைவாயில் பகுதியில் இருந்து அளவிடும் போது அரசுத்தரப்பு குறிப்பிட்டுள்ள தூரம் வரும். பொதுவாக நுழைவாயில் பகுதியில் இருந்து தான் தூரம் அளவிடப்படும் என அரசு வழக்குரைஞர் விளக்கினார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. பின்னர் நீதிபதிகள், கடையை வெள்ளிக்கிழமையே மூடமுடியுமா என கேள்வி எழுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியரை ஆலோசித்து கூற அரசு வழக்குரைஞருக்கு நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். பின்னர் கடையை மூட அரசு வழக்குரைஞர் சம்மதித்தார். தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் அது தொடர்பான ஒப்புதலை எழுத்துப் பூர்வமாக அளித்தார்.
இதன் பின்னர், மாரனேரியில் பள்ளி அருகேமதுக்கடையை மூடிவிட்டு, விதிகளின் படி வேறு இடத்துக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூரத்தை விட யதார்த்த நிலை முக்கியம்
பள்ளி அருகே மாணவர்களின் கண்பார்வையில் மதுக்கடை உள்ளது. மாணவர்கள் அந்த வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. மாணவியரும் அங்கு படிக்கின்றனர். இதை எந்த பெற்றோரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அந்தப் பள்ளியில் படிக்க வைப்பாரா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளி அருகே மதுக்கடையை அமைப்பதில் தூரத்தை விட யதார்த்த நிலையை அதிகாரிகள் உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும் என்றனர்.
இவ்வழக்கில் சன்மானம் பெறாமல் பணியாற்றியதற்காக வழக்குரைஞர் ஆணையர் ஜி.பகவத்சிங்கை நீதிபதிகள் பாராட்டினர்.
No comments:
Post a Comment