'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதித்துள்ள, கல்வி கடன் வட்டி தள்ளுபடியை அளிக்க, வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.
இதையேற்று, 'அனைத்து வங்கிகளும், வட்டி தள்ளுபடியை அளிக்க வேண்டும்' என, இந்திய வங்கிகள் சங்கம், இம்மாதம், 26ம் தேதி உத்தரவிட்டது.
ஆனாலும், வட்டி தள்ளுபடி கேட்டு, வங்கிகளை அணுகும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற, வங்கிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு உத்தரவிட்டு, மூன்று நாட்கள் ஆகியும், வங்கி கிளைகளுக்கு தனியாக, உத்தரவு வரவில்லை எனக்கூறி, விண்ணப்பங்களை வங்கி மேலாளர்கள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கல்விக்கடன் ஆலோசனை குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன்
கூறியதாவது:ஆண்டுதோறும், கல்விக்கடன் வட்டியை கணக்கிட்டு, முதன்மை வங்கியான கனரா வங்கியின், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த கணக்குகளுக்கு, வட்டி தள்ளுபடி அளிக்கப்பட்டு உள்ளது. இதில், பல ஆயிரம் பேரின் வட்டி தள்ளுபடி கோரும் விண்ணப்பங்கள் சேர்க்கப்படவில்லை. அதனால், 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை, கல்வி கடன் பெற்றவர்கள், வட்டி தள்ளுபடி கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மனிதவள மேம்பாட்டுத் துறை, வட்டி தள்ளுபடியை அளிக்க, இறுதி வாய்ப்பை மாணவர்களுக்கு அளித்துள்ளது. வட்டி தள்ளுபடியை கணக்கிட்டு, வங்கி கிளைகள், அதன் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி, கனரா வங்கியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த வாய்ப்பு, செப்., 15ம் தேதி வரையே உள்ளது. எனவே, வங்கி கிளைகள், வட்டி தள்ளுபடியை அவர்களே முன் வந்து அளிக்கலாம். இல்லையேல், மாணவர்களின் கோரிக்கை மனுவை பெற்று அனுப்பலாம். கால அவகாசம் மிகக் குறைவாக உள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment