Pages

Monday, August 31, 2015

இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக மாநிலங்களுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


தொழிலாளர் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில், கடந்த சில நாட்களாக மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. பாஜகவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழு, இந்தப் பேச்சில் ஈடுபட்டு உள்ளது.

அமைச்சர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில், மத்திய அரசு தரப்பில் சில அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. அதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்ற தகவல், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டு, வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்போதைய குறைந்தபட்ச மாத சம்பளம் 4,160ஐ உயர்த்த வேண்டும் என்பதுதான், வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கை என்பதால் மத்திய அரசின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் முன்வந்து உள்ளன. 

எனினும் தங்கள் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டால், இப்போது மிகக்குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது கட்டாயமாகி விடும், இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதோடு, தொழிலாளர்களின் வாக்குகளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வரும் தேர்தல்களில் கிடைக்கும் என்பது மத்திய அரசின் எண்ணமாகவுள்ளது. இப்போதைய நிலையில் மாதம் ரூ. 10 ஆயிரத்திற்குள் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே போனஸ் பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். அதை இரட்டிப்பாக்க உள்ள மத்திய அரசு, மாதம் 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களும் போனஸ் பெற தகுதியுடையவர்கள் என பென்ஷன் சட்டத்தை மாற்ற உள்ளது. 

அதுபோல், குறைந்தபட்ச போனஸ் தொகை 3,500 ரூபாயாக இருப்பதையும் 10 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது. அதே சமயம் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப் போவதில்லை என்பதுதான் மத்திய அரசின் சூட்சுமமான முடிவு. மாநிலங்களுக்கு ஏற்ப, தொழிலாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளனர். அதன்படி, குறைந்தபட்ச மாத சம்பளம் 7,100 ரூபாயாகவும் அதிகபட்ச சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும். தற்போதுள்ள மாநிலங்கள் ஏ - வளர்ச்சி அடைந்த பி - வளரும் சி - வளராத என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளன. - 

'ஏ' பிரிவில் உள்ள திறனே இல்லாதவர்களுக்கு மாதம் 10 ஆயிரம், 'பி' பிரிவில் உள்ள திறனே இல்லாதவர்களுக்கு மாதம் 8,500 'சி' பிரிவில் உள்ள திறனே இல்லாதவர்களுக்கு 7,100 ரூபாய் வழங்கப்படும். - 'ஏ' பிரிவில், 'செமி ஸ்கில்டு' எனப்படும், கொஞ்சம் திறன் வாய்ந்தவர்களுக்கு 15 ஆயிரம் 'பி' பிரிவில் இத்தகையவர்களுக்கு 12 ஆயிரத்து 750 'சி' பிரிவில் 10 ஆயிரத்து 650 ரூபாய் வழங்கப்படும். - 'ஸ்கில்டு' எனப்படும் திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு 'ஏ' பிரிவில் 20 ஆயிரம் 'பி' பிரிவில் 17 ஆயிரம் 'சி' பிரிவில் 14 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும். இதற்காக குறைந்தபட்ச கூலி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment