பல் மருத்துவக் கல்லுாரியில், நாற்பதாக உள்ள பி.டி.எஸ்., சீட் எண்ணிக்கை நுாறாக உயர்த்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார். கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி டீன் ரமேஷ் வரவேற்றார். சேர்மன் டாக்டர் லுாயி கண்ணையா தலைமை தாங்கினார். ஜெயபால் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். முதலாமாண்டு வகுப்பை முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முதலாமாண்டு மாணவர்கள் 40 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில, அனைத்து வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. முதலாமாண்டு, பல் மருத்துவத்தில் சேர்ந்துள்ள நீங்கள், நல்ல பல் மருத்துவராக வர வேண்டும். முக்கியமாக, கிராமங் களுக்கு சென்று பணியாற்ற முன்வர வேண்டும்.பல் மருத்துவம் படித்தால் வேலை கிடைக்குமா என பலர் நினைக்கின்றனர்.
பல் மருத்துவம் படித்தால் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் பல் மருத்துவர்கள் உள்ளனர். இது 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது.
ஆனால் மூன்றாயிரம் பேருக்கு ஒரு பல் மருத்துவர் தேவை. பல் மருத்துவம் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. இக்கல்லுாரியில் 40 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு 50 ஆகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக சீட் எண்ணிக்கையை நுாறாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். முதுகலை பல் மருத்துவ படிப்பில், இரு பிரிவிலும் சீட் எண்ணிக்கை தலா 3 ஆக உயர்த்தப்படும்.
மேலும் டென்டல் மெடிசின், டென்டல் ஹைஜீனிஸ்ட் ஆகிய இரு புதிய டிப்ளமோ பாடப்பிரிவுகள், தலா 5 இடங்களுடன் துவங்கப்படும். முதுநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.24 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் 2007ம் ஆண்டு புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்ததன் பலனாக, அங்கு, 200 ஏக்கரில் என்.ஐ.டி., உருவாகி வருகிறது.
காரைக்காலில் ஜிப்மர் கிளை துவங்க 36 ஏக்கர் ஒதுக்கி உள்ளோம். விரைவில் ஜிப்மர் கிளை துவங்கி அடுத்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகமும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார். மாணவர் ஆலோசனை குழு தலைமை ஆலோசர் ஜோனதான்டேனியல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment