காஞ்சிபுரத்தில் நடந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி, ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு காஞ்சிபுரம் கா.மு. சுப்புராயன் முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடக்கக் கல்வித் துறை உதவி இயக்குநர் உமா, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.
இதில், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பணி நிரவலில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டப்படி உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி, அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர்.
இதையடுத்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் தொடக்கக் கல்வித் துறை உதவி இயக்குநர் உமா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கலந்தாய்வு நடைபெற்றது.
இதுகுறித்து அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் சேகர் கூறியதாவது:
அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அந்த விகிதப்படி, 61 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியிடம் இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிகளுக்குப் புறம்பாக 75 மாணவர்கள் இருந்தால்தான் 3-ஆவது ஆசிரியர் நியமிக்கப்படுவர் என்று கல்வித் துறையினர் திடீரென வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.
அப்படி என்றால் ஒரு பள்ளியில் 74 மாணவர்கள் படித்து 3 ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒரு ஆசிரியர் பணி நிரவல் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். பேச்சுவார்த்தைக்குப் பிறகு 71 மாணவர்களுக்கு 3 ஆசிரியர் என்று உடன்பாடு ஏற்பட்டது. அதேபோல், 55 மாணவர்கள் இருக்கும் பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணிபுரிந்தால், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அதிகாரிகள் உடன்பட்டனர். இதன் பிறகு நாங்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டோம் என்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, எவ்விதப் பிரச்னையும் இல்லை. உரிய விதிமுறைகளின் அடிப்படையில் பணி நிரவல் கலந்தாய்வு அமைதியாக நடைபெறுகிறது என்றார்.
No comments:
Post a Comment