Pages

Wednesday, August 19, 2015

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
 இது குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.

 இப்பதவிகளுக்கான நேர்காணல் கடந்த ஜூலையில் நடந்தது.
 இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
 ஆயிரத்து 136 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், நேர்காணலில் கலந்து கொண்ட அனைத்து 2,222 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ள தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் அழைப்புக் கடிதம், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அழைப்புக்கடிதம் வரப்பெறாதவர்கள் அதனை தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment