அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 4,385 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை, கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 4,385 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஏப்ரலில், பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது; பின், எழுத்துத் தேர்வும் நடத்தியது.இந்நிலையில், இந்தத் தேர்வு முறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆறு பேர் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களில் கூறியிருந்ததாவது:'எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண், கணக்கில் கொள்ளப்படாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக தேர்வு செய்வதும் சரியல்ல. எழுத்து தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, அனுபவம் மற்றும் உயர் கல்விக்கு என, தனித்தனியாக, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
குரூப் - 4, குரூப் - 2 போன்ற, அரசு பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வானது, எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் நடக்கிறது. மாநில அடிப்படையிலான, இந்த பணியாளர் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
நேர்முகத் தேர்வு அல்லாமல், எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யும் நடைமுறை, நியாயமானதாக, வெளிப்படையானதாக இருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், இந்த பணியாளர் தேர்வு முறையில், மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.
எனவே, நேர்முகத் தேர்வுக்காக, நேரம், சக்தியை, அரசு செலவு செய்ய வேண்டிய தேவையில்லை. எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, உயர் கல்வி மற்றும் அனுபவத்துக்கு என, தனித்தனியாக, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், ஆய்வக உதவியாளர் தேர்வு நடந்தால், அது வெளிப்படையாக இருக்கும்.மத்திய பிரதேசத்தில் நடந்த, 'வியாபம்' ஊழல் குறித்த செய்தி, பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாக வந்தது.
தேர்வு மோசடி குறித்த இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மருத்துவ நுழைவு தேர்வையும், உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, மறு தேர்வுக்கு உத்தரவிட்டது.தற்போதைய தேவை, வேலைக்கான ஆட்கள் தேர்வானது, நியாயமானதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதே. நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடந்தால், மக்களுக்கு சந்தேகம் ஏற்படும்.
உயர் பதவிகளுக்கு, நேர்முகத் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. அதேநேரத்தில், கடைநிலை பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்வது, சட்டவிரோதமானது; தேவையற்றது.எனவே, ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், ஆட்களை தேர்வு செய்வது, சட்டவிரோதமானது. எழுத்து தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு, 10; உயர் கல்விக்கு, 5; அனுபவத்துக்கு, 2 மதிப்பெண் என, மொத்தம், 167 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு, அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இல்லையெனில், இதே அம்சங்களுடன், நேர்முகத் தேர்வையும் சேர்த்து, அதற்கு, 8 மதிப்பெண் அளித்து, மொத்தம், 175க்கு கணக்கிடலாம். எதிர்காலத்தில், மாநில அளவில் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போதைய மாவட்ட அளவிலான தேர்வில் குறுக்கிட விரும்பவில்லை.
எனவே, எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றம் பரிந்துரைத்த, இரண்டு வழிகளில் ஒன்றை பின்பற்றி, தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையில்லை.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment