Pages

Thursday, August 13, 2015

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் அட்டை பெற நடவடிக்கை  தமிழக அரசு அறிவிப்பு:
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும், சென்னையில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் டேட்டா கலெக்‌ஷன் சென்டர் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்த மையங்களிலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயோமெட்ரிக் டேட்டா எடுக்கப்பட்டு ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் எண்ணை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்யாத சென்னையை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இயங்கும் மையங்களில் சமர்ப்பிப்பதுடன், குடும்ப அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்ஓட்டுநர் உரிம அட்டை, வங்கி புத்தகம் ஆகிய ஆவணங்களில் தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர வேண்டும். ஏற்கனவே, ஆதார் எண்ணிற்காக பதிவு செய்தவர்கள் தற்போதைய நிலையை அறிய www.resident.uidai.net.in என்ற இணையதளத்தையும், மின் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய www.eaadhaar.gov.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்தி தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment