Pages

Friday, January 15, 2016

அரசு உதவி பெறும் பள்ளி அங்கீகாரம் வழங்க கெடு

அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, அங்கீகார பிரச்னையை சரிசெய்யும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தர விட்டுள்ளார். தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அங்கீகாரம் புதுப்பிக்கப் படுகிறது. 



அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் ஊதியம், பள்ளி பராமரிப்பு செலவு, மாணவர் சலுகைகள் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கிறது. எனவே, தனியார் பள்ளிகளை விட, அரசு உதவி பெறும் பள்ளிகள் விஷயத்தில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே, அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில், பொதுத் தேர்வு வரவுள்ள நிலையில், அங்கீகாரம் இருந்தால் தான், மாணவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே, இம்மாத இறுதிக்குள் அங்கீகாரம் வழங்கி, அதன் அறிக்கையை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தர விட்டுள்ளார்.


அங்கீகார சிக்கல்

தனியார் பள்ளிகளாக இருந்தாலும், அரசு நிதியில் செயல்படுகின்றன. ஆனால், தனியார் சுயநிதி பள்ளிகள் போல் கட்டணம் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.


எனவே, 'அரசு உதவி பெறும் பள்ளி' என்பதை, பெயர் பலகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், 99 சதவீத பள்ளிகள் செய்யவில்லை. இந்த பள்ளிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment