செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
இந்தியத் தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட உள்ளது. இந்த ஆண்டின் மையநோக்கு, "ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல்' என்பதாகும்.
எங்கெங்கு விழாக்கள்? மாநில அளவிலான விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறும். இதில், ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று, வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து, சிறப்புரையாற்றுவார். மேலும், புதிதாகப் பதிவு செய்தவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையையும் அவர் வழங்குவார்.
மாநில தேர்தல் ஆணையர் பி. சீத்தாராமன், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். இதேபோல், மாவட்ட அளவிலும், 65,616 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 29,291 வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாக்களில் ஸஉறுதிமொழியினை வாக்காளர்களை ஏற்கச் செய்வதோடு, அடையாள அட்டையை வழங்குவதும், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்வதும் வேண்டும். அப்போது, வாக்களிப்பது எப்படி குறித்த கையேடும் வழங்கப்படவுள்ளன.
மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும்.
இதேபோல், குடியரசுதினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டங்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும். சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாப் பேரணியில் ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல் என்னும் மையநோக்கின் அடிப்படை குறித்த அலங்கார ஊர்தியும் இடம்பெறும்.
செல்லிடப்பேசி குறுஞ்செய்தி: அனைத்து வாக்காளர்களும் தங்களின் செல்லிடப்பேசி எண்ணிலிருந்து 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பலாம். இதன் மூலம், வாக்குச்சாவடி விபரம், வாக்காளர் விபரம் குறித்த தகவல்கள் வாக்காளரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அவ்வப்போது அனுப்பப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
No comments:
Post a Comment