Pages

Wednesday, January 20, 2016

பீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம், பெற்றோர்களுக்கு சிறை


பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும்  பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த வருடம் மார்ச் 17–ந் தேதி
தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு,  ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கினர். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள்.
இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். மொத்தத்தில் தேர்வு அறைகளில் இருந்த கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுமே ‘பிட்‘ தட்டுப்பாடு இன்றி பரீட்சையை பயம் இன்றி வெற்றிகரமாக எழுதினார்கள். இந்த அரிய காட்சியை, அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். அதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்விவகாரம் சர்வதேச அளவில் செய்தியானது.
இந்நிலையில் இந்தமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார் பள்ளி கல்வித்துறை, 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும் பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரித்து உள்ளது. “காப்பி அடிக்கும் மாணவர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று பீகார் பள்ளி கல்வித்துறை தலைவர் லால் கேஷ்வார் பிரசாத் சிங் கூறிஉள்ளார். முன்னதாக ஒரு வருடமாக இருந்தது.
பீகார் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கிறது. தேர்வு நடைபெறும் பள்ளி அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்களை வைக்கவும் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டு உள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பீகார் மாநில கல்வி மந்திரி பி.கே.சாகி பேசியபோது, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம், இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சினை என்று கூறினார்.

No comments:

Post a Comment