கேரளாவில் திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது. கேரளாவில் சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சம்பள உயர்வு குறித்து ஆலோசிப்பதற்காக கேரள அரசு ஒரு கமிஷனை நியமித்தது. இந்த கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வர் உம்மன்சாண்டியிடம் தாக்கல் செய்தது. பின்னர் இந்த அறிக்கையை அமைச்சரவை துணைக்கமிட்டி பரிசீலித்தது.
இந்நிலையில் சம்பள உயர்வு குறித்த அறிக்கை நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிறகு முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ''அடுத்த மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ7,222 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.
2014ம் ஆண்டு ஜூலை முதல் முன்கால அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாயும், அதிகபட்சம் 12,000 ரூபாயும் அதிகரிக்கும். இதன்படி குறைந்தபட்ச சம்பளம் ரூ16,500 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ1,20,000 ஆகவும் இருக்கும்'' என்றார்.
No comments:
Post a Comment