தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.
இதில், என்.ஐ.டி.,- ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில் சேர, முதற்கட்ட ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஆனால், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த முறையை. 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல் மாற்ற, மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அனைத்து மாணவர்களும் முதற்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு பதில், என்.ஏ.டி., எனப்படும் தேசிய திறன் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டாம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றால், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த முடிவு குறித்த அறிக்கை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் மூலம், பார்லிமென்ட் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், 2017 - 18ல் அமலுக்கு வரும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment