நாமகிரிப்பேட்டை: மலைப்பகுதியில் உள்ள, உறைவிடப்பள்ளி தலைமையாசிரியை, பள்ளிக்கு செல்லாமல், தன்னிச்சையாக ஒருவரை நியமித்து, சம்பளம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த, போதமலை மலைப்பகுதியில் உள்ள கீழூரில், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக, உறைவிட துவக்கப்பள்ளி செயல்படுகிறது.
இங்கு, இரண்டு மாணவியர், ஐந்து மாணவர் என, ஏழு பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு, இப்பள்ளியிலேயே தங்குவதற்கு வசதியும், உணவும் கொடுக்க வேண்டும். உறைவிடப்பள்ளி என்பதால், விடுதியின் காப்பாளராக பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பு வகிப்பார்.
ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியை அமல்செல்வி, பள்ளிக்கு வருவதே இல்லை. 2014 ஜூனில் இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்த இவர், ஒரு மாதம் கூட முழுமையாக பள்ளிக்கு சென்று, குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கவில்லை.
அதற்கு பதிலாக, கடந்த, ஓராண்டாக, ராசிபுரம் அடுத்த, கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி கார்த்திக் என்பவரை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு அனுப்பி வருகிறார். தலைமையாசிரியை, தன்னிச்சையாக ஒருவரை பணி அமர்த்தி, கல்வித்துறையை ஏமாற்றியது மட்டுமின்றி, மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியையும் கேள்விக்குறியாக்கியுள்ளார்.
இது குறித்து, மலைவாழ் மக்கள் கூறுகையில், 'பட்டதாரி வாலிபரும், வாரத்தில், இரண்டு அல்லது, மூன்று நாள் மட்டுமே பள்ளிக்கு வந்துவிட்டு, கீழே இறங்கிவிடுகிறார். மற்ற நேரங்களில், பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் சமையல் வேலையை கவனிப்பவர் தான், மாணவர்களை பார்த்துக் கொள்கின்றனர். இருவரும், வெள்ளிக்கிழமை மதியமே கீழே சென்று விடுவதால், இப்பள்ளியில் படிக்கும், ஏழு மாணவர்களும், கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதில், அங்கு வீடு இல்லாத குழந்தைகள், சாப்பாடு இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர்; உறவினர்கள் வீட்டில் தங்க வேண்டியுள்ளது. சில ஆண்டுகளாகவே இப்பிரச்னை உள்ளது.
தலைமையாசிரியை, பள்ளிக்கு வராமல், முறைகேடாக வருகை பதிவு செய்து, சம்பளம் பெறுகிறார். அதிகாரிகளும், மலைப்பகுதி குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடல்நிலை சரியில்லை
தலைமை ஆசிரியை அமல்செல்வியிடம் கேட்டபோது, ''என் உடல்நிலை சரியில்லாததால், எனக்கு பதில் ஒரு பட்டதாரி ஆசிரியரை அனுப்பி வைத்தேன்; அவருக்கு நான் தான் சம்பளம் கொடுக்கிறேன். மற்றொரு பள்ளியையும் கவனிக்க வேண்டியுள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment