Pages

Wednesday, January 27, 2016

இப்படியும் ஊழலை ஒழிக்கலாம்: வழிகாட்டுகிறது கேரளத்தின் கிழக்கம்பல கிராமம்!


கேரள மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலம் பெரும்பாலும் அல்பாயுசு தான். யாரும் இங்கு தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததே கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும். படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கிழக்கம்பலம் என்கிற கிராமம்.


ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலை மாறி மூன்றாவது அணி உருவாகிவிட்டதா என்ற அநாவசியமாக யூகிக்க வேண்டாம்.

அரசியல் கட்சிகளைச் சேராத ஒரு நிறுவனம், அதன் பிரதிநிதிகள் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கேரள மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இது கேரளத்தில் மட்டும்தான் சாத்தியமா?

இது முழுக்க முழுக்க அரசியல்கட்சி விஷயமாக இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு ``வணிக வீதி’’யில் இடமிருந்திருக்காது. ஒரு தொழில் நிறுவனத்திடம் கிழக்கம்பல கிராம பஞ்சாயத்து எப்படி வசமானது என்ற சுவாரஸ்யமே இக்கட்டுரைக்கு அடித்தளமிட்டது.

கிழக்கம்பலத்தின் பின்னணி

கேரள மாநிலத்தில் பசுமைசூழ் கொச்சியில், விவசாய நிலம் கொண்ட ஒரு புறநகர் பகுதி. பெரும்பாலும் பாரம்பரியம் மாறாத கேரள பாணியிலான வீடுகள் இங்குள்ளன.

பஞ்சாயத்து தேர்தல்

கடந்த நவம்பர் மாதம் இங்கு நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் முற்றிலும் அரசியல் சாராத டி20 குழுவைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 19 வார்டுகளில் 17 வார்டுகள் டி20 குழு வசமானது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அண்ணா கிடெக்ஸ் தொழில் குழுமத்தால் உருவாக்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புதான் டி20.

கிடெக்ஸ் தொழில் குழுமம்

குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பில் முன்னணியில் உள்ளது கிடெக்ஸ் குழுமம் இந்நிறுவனம் சர்வதேச பிராண்டுகளான மதர் கேர், வால்மார்ட், டாய்ஸ் ஆர் அஸ், கெர்பெர், ஜாக்கி மற்றும் கோஹ்ல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆடைகளைத் தயாரித்து அளிக்கிறது.

இந்நிறுவனத் தயாரிப்புகள் முற்றிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிடெக்ஸ் குழும நிறுவனங்கள் ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி வாசனை பொருள்கள் ஏற்றுமதியிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் 15 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,200 கோடியாகும். இந்நிறுவனத்தின் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவுகள் கிழக்கம்பலம் கிராமத்தில் உள்ளன.

தேர்தலில் போட்டியிடக் காரணம்

கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் உள்ள இந்நிறுவன ஆலைக்கு நிரந்தர லைசென்ஸ் வழங்க கிழக்கம்பலம் பஞ்சாயத்து மறுத்துவிட்டது. சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக இந்த ஆலை பூர்த்தி செய்தபோதிலும் இந்நிறுவனத்துக்கு லைசென்ஸ் மறுக்கப்பட்டது. மாநில அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம் தாற்காலிக லைசென்ஸ் வழங்கியபோதிலும் அதை கிராம பஞ்சாயத்து ஏற்கவில்லை. பிரச்சினை நீதிமன்றம் சென்றது. பிறகு நீதிமன்ற தலையீட்டில் லைசென்ஸ் கிடைத்தது.

அரசியல் கட்சிகளின் தொடர் நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்ற உந்துதல் காரணமாக தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளை கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் களமிறக்கியது கிடெக்ஸ்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிறுவனம் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொண்ட நலத் திட்டப் பணிகளுக்குப் பிரதி உபகாரமாக மக்கள் டி20 பிரதிநிதிகளுக்கு அமோக ஆதரவு அளித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

சாதாரண மக்கள் டி20 செயல் பாடுகளால் ஈர்க்கப்பட்டதில் வியப் பேதும் இருக்க முடியாது. அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமல் நொந்து போன மக்கள், டி20 செயல்பாடுகளால் பெரிதும் கவரப்பட்டனர். இவற்றுக்கு மேலாக அரசியல் தான் தங்களது உயிர்மூச்சு என தொடர்ந்து கொள்கை பிடிப்பில் இருந்த அரசியல் கட்சி தொண்டர்களும் இப்போது படிப்படியாக டி20 பக்கம் திரும்பியுள்ளனர்.

சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி தொழிற்சங்கமான ஏஐடியூசி-யைச் சேர்ந்தவர்களும் இதில் சேர்ந்துள்ளனர். ஏஐடியுசி உறுப்பினர்கள் சிலர் டி20 பேட்ஜை தங்களது சட்டையில் குத்திக் கொண்டு பெருமையாக வலம் வருகின்றனர்.

வெளிப்படையான செயல்பாடு

தொண்டு நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் வெளிப்படையானது. திட்டப் பணிகள் அனைத்துமே 18 பேரடங்கிய நிர்வாகக் குழுதான் ஒப்புதல் அளிக்கும். இதில் அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், உள்ளூர் வர்த்தகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று உள்ளூர் அரசியல் பிரமுகர்களே கூறுகின்றனர். அரசு நிர்வாக இயந்திரத்தில் நிதி ஒதுக்கீடு மிகவும் மெதுவாகத்தான் நடைபெறும். ஆனால் நிறுவனங்கள் தொழில்முறையில் அதை சிறப்பாக நடத்துகின்றன. இதுவே கிடெக்ஸ் குழுவின் வெற்றிக்குக் காரணம் என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளூர் தலைவர் அனில் குமார்.

கிராமத்தில் தங்கள் தொழில் எவ்வித இடையூறுமின்றி நடத்த வசதியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது கிடெக்ஸ் என்று அரசியல் கட்சியினர் புலம்புகின்றனர்.

நிறுவன சமூக பொறுப்புக்கான ஒதுக்கீட்டை கட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று சட்ட ரீதியாக இந்நிறுவனம் மீது குற்றம் சுமத்து வோரும் உண்டு. மாற்றம் நிகழ்ந்தே தீரும். இருக்கும் கட்சிகளில் எதுவும் சரியில்லை எனில் மக்கள் தேர்தலையும் புறக்கணிப்பர். ஒரு நிறுவனத்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அதை இரு கரம் நீட்டி வரவேற்கத்தான் செய்வர்.

கேரள மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் விஸ்வரூபமெடுக்க வெகு காலமெடுக்காது. இதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர வேண்டும்.

பாதி விலையில் மளிகை சாமான்


சலுகை விலையில் மளிகை சாமான், காய்கறிகளை அளிக்கும் டி20 விற்பனை அங்காடி.

கிழக்கம்பலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள 8 ஆயிரம் குடும்பங்களில் 6,700 குடும்பங்கள் டி20 அமைப்பில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன. இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும்தான் சலுகை கிடைக்கும்.

இந்த அமைப்பு நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என நான்கு வண்ணங்களில் குடும்பத்தினரின் வருமான அடிப்படையில் உறுப்பினர் அட்டைகளை வழங்கியுள்ளது.

இதில் 71 சதவீதம் குடும்பங்கள் அதாவது 4,627 குடும் பங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண அட்டைகளைக் கொண்டுள்ளனர். இந்த வண்ணமானது குறைந்த வருவாய் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களை அடையாளம் காட்டும். விற்பனை அங்காடியில் உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்கப்படுகின்றன. ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்கு காய்கறி செலவு ரூ. 300 ஆகும் என்றால் அது டி20 அங்காடியில் ரூ. 100-க்கு வழங்கப்படும். அதேபோல மளிகை சாமான்கள் பாதி விலையில் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.

தொழிற்சங்கம் இல்லாத ஆலை


தொழிலாளர்களுடன் நிறுவனத்தின் தலைவர் சாபு ஜேக்கப் (வலது ஓரம்).

1960-ம் ஆண்டு அண்ணா கிடெக்ஸ் கம்பெனி என்ற பெயரில் கிழக்கம்பலம் கிராமத்தில் தொடங்கப்பட்டது. 8 பணியாளர்களுடன் இதைத் தொடங்கினார் நிறுவனர் எம்.சி. ஜேகப். 1995-ம் ஆண்டு இந்நிறுவனம் 100 சதவீத ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனமாக மாறியது.

இன்று கேரள மாநிலத்தில் மிக அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கியுள்ள மிகப் பெரிய தொழில் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 15,500 ஊழியர்கள் பணியாற்றும் இந்த ஆலையில் தொழிற்சங்கமே கிடையாது.

நிறுவன சமூக பொறுப்புகளை (சிஎஸ்ஆர்) நிறைவேற்ற கிடெக்ஸ் உருவாக்கியதுதான் டி20. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மீதான ஆர்வத்தில் தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு டி20 என பெயரிட்டதாக நிறுவனத்தின் தலைவர் சாபு ஜேக்கப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டி20 அமைப்பானது திருவாங்கூர் கொச்சின் இலக்கிய அறிவியல் மற்றும் அறக்கட்டளை சங்க பதிவு சட்டம் 1955-ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன செய்தது டி20

இந்த அறக்கட்டளை கடந்த 2 ஆண்டுகளில் இக்கிராம மேம்பாட்டுக்கு ரூ. 28 கோடியை செலவிட்டுள்ளது. குடிநீர் வசதி செய்து தருவது, சாலை அமைப்பது, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது மற்றும் ஏழை மக்களின் மருத்துவ செலவுகளை ஏற்பது உள்ளிட்ட பணிகளை இத்தொண்டு நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக செய்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக கிழக்கம்பலம் பஞ்சாயத்து மூலம் இக்கிராமத்துக்கு செலவிட்ட தொகை ரூ. 22.4 கோடி. ஆனால் டி20 கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிட்ட தொகை ரூ. 28 கோடியாகும்.

No comments:

Post a Comment