ஜனவரி 4, 1643, ஐசக் நியூட்டன் பிறந்த தினம்
இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார். அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
ஆப்பிள் மரத்தில் இருந்த பழம் தரையை நோக்கிச் செல்வதற்காண காரணத்தை அறிய இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவே ,புகழ்பெற்ற நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை விதி தோன்ற காரணமாக அமைந்தது. நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள், நியூட்டன் வண்ணத்தகடு, மற்றும் அவரது கணித நூல்கள் போன்றவை நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவரை போற்றும் விதமாக நியூட்டனின் மறைவுக்கு பிறகு அவரது கல்லறையில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் என பொறிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி, 4, 1809, லூயி பிரெய்லி பிறந்த தினம்
பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி பிறந்த தினம் இன்று. 1809 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த இவர், சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தன் கண்பார்வையை இழந்தார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர், 1819-ல் பார்வையற்ற இளைஞர்களுக்கான நிறுவனத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிறுவன உரிமையாளராக இருந்த வாலன்டின் ஹேய், சாதாரணமாக உருவாக்கியிருந்த பழமையான எழுத்து முறை , கடினமானதும் வேகம் குறைந்ததுமாக அமைந்திருந்தது.
எனவே பார்வையற்ற மாணவர்களுக்கு எழுத்தைப் பயிற்றுவிக்க இந்த முறை பயன்படவில்லை. இதனால் பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக ஒரு முறையை உருவாக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை பிரெய்லிக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் என்னும் முறை பிரெய்லிக்கு உதவிகரமாக அமைந்தது.
இம்முறையைப் பயன்படுத்தி 1829 ஆம் ஆண்டு ஒன்று முதல் ஆறு புடைப்புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார். அவரின் கண்டுபிடிப்பு பார்வையற்றோரின் வாழ்வில் வழிகாட்டியாக உள்ளது.
No comments:
Post a Comment