வெறுப்புப் பிரச்சாரங்கள், மதச்சாய கருத்துகள் பரவாமல் தடுக்க சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் பக்ரீத் பண்டிகையன்று வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியையடுத்து முகமது இக்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, வெறுப்புப் பிரச்சாரங்கள், கண்டனத்துக்குரிய கருத்துகள், மதச்சாயம் கொண்ட கருத்துகளை சமூக வலைத்தளங்கள் உடனுக்குடன் நீக்க வேண்டும் என அரசு வலியுறுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியான வெறுப்புப் பிரச்சாரங்கள், சில புகைப்படங்கள், ஒலிப் பதிவுகள், வீடியோ காட்சிகள் சமூக நல்லிணக்கத்தை பாதிப்பதாக இருந்ததையடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். சமூக வலைதள பிரதிநிகளுடனான ஆலோசனையின்போது, கண்டனத்துக்குரிய கருத்துகளை அரசே பரிந்துரைக்கும் என்ற தகவலை தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment