தேர்வுகளில் காப்பி அடிக்க உதவும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட உடைகளை தயாரித்து விற்றதாக, டெல்லியில் இருவர் சிக்கியுள்ளனர். இங்கு தனியார் உளவுத்துறை நிறுவனம் நடத்தி வந்தவர்களை ராஜஸ்தான் மாநில சிறப்பு போலீஸ் படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 2-ல் ராஜஸ்தான் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இளநிலை கணக்காளர் பதவி 2013 ஆன் ஆண்டுகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்கு ஒருநாள் முன்பாக நம்பர் பிளேட் பொருத்தப்படாத காரில் உதய்பூர் வந்தவர்களை போலீஸார் மடக்கி சோதனை இட்டனர். இவர்களிடம் எழுத்து தேர்வில் காப்பி அடிப்பதற்காக நவீன கருவிகள் பொருத்தப்பட்ட உள்ளாடைகள் சிக்கின.
இவைகளில், மிகச்சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்ட மொபைல் போன், புளூடூத், ரகசிய கேமிரா ஆகியவை அதிக தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம், தேர்வு எழுதுபவர்களுக்கு வெளியில் இருந்து தேர்வுக்கானப் பதில்கள் அனுப்பும் வகையிலும், தங்கள் வினாத்தாள்களை படம் எடுத்து வெளியில் அனுப்பும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முக்கிய குற்றவாளியாக ராஜஸ்தானின் ஜலோரில் ஜெக்தீஷ் பிஷ்னோய் என்பவர் சிக்கினார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியின் கிரீன்பார்க் பகுதியில் ‘ஸ்பை இந்தியா பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில் தனியார் உளவு நிறுவனம் நடத்தி வந்த அதன்இயக்குநர்களான வருண் வர்மா மற்றும் சதானந்த் சரோஜ் எனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், தேர்வில் காப்பி அடிக்க ஏதுவாகப் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்ட சுமார் 300 உடைகளையும் ராஜஸ்தான் போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த மோசடியில் தேர்வில் காப்பி அடிப்பதற்காக ஆணுக்கு மற்றும் பெண்ணுக்கு எனத் தனியாக உள்ளாடைகள் இரண்டு வகையாக தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த உடைகளை தேர்வு எழுதுபவர் மற்றும் அவருக்கு உதவுபவர் என இருவர் அணிந்து மோசடி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு எழுதுபவர்களுக்கான உடை ரூபாய் 8000 மற்றும் அவர்களுக்கானப் பதில்களை உடனுக்குடன் அனுப்பி உதவுபவர்களின் உடைகளின் விலை 80,000 ரூபாய் எனவும் விற்கப்பட்டுள்ளன.
இந்த விலையில் ராஜஸ்தானின் தேர்வு மாபியாக்களால் வாங்கப்பட்ட உடைகள் மாணவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் விலைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், வினாத்தாள்களை அனுப்ப கூகுள் நிறுவனத்தின் சாப்ட்வேர் டிராப் பாக்ஸ் மற்றும் மெயில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து ராஜஸ்தான் சிறப்பு போலீஸ் படையின் தலைவரான கூடுதல் இயக்குநர் ஜெனரல் அலோக் திரிபாதி ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜெக்தீஷ் பிஷ்னோய், ஸ்பை இந்தியா உளவுத்துறை நிறுவனத்தாருடன் தொடர்பு வைத்திருந்து இருக்கிறார்.
இவர்களுக்கு பல நூறு மாணவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். எனவே, சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த மோசடி பல தேர்வுகளில் நடந்திருக்கும் எனக் கருதுகிறோம். இதுவரை 20 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.’ எனத் தெரிவித்தார். இதன் விசாரணை முடியும் வரை ரஜஸ்தான் அரசின் இளநிலை கண்காளர் தேர்விற்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment