Pages

Monday, October 12, 2015

மாணவர்களுக்கு நேர்மறை சிந்தனை வேண்டும், 'தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில் அறிவுரை

'தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'ஜெயித்துக் காட்டுவோம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி உடுமலையில் நேற்று நடந்தது. அதில் பாடம் வாரியாக, கோவை, காரமடை வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தேர்வுக்கு பயனுள்ள குறிப்புகளை வழங்கினர்.

தொடர் பயிற்சியால் பாடத்தில் சதம் எடுப்பது எளிது 
உமாதேவி(தமிழ்): தமிழ் பாடத்தில் சதம் எடுப்பதற்கு, கையெழுத்தே முதன்மையானது. கையெழுத்து சரியில்லாத மாணவர்கள் தினசரி ஒரு மணி நேரமாவது, பயிற்சி செய்வது அவசியம். முடிந்த வரை செய்யுள் அடிகள் உள்ள வினாக்கள் தேர்வு செய்து, விடை எழுதும் போது, செய்யுள் வரிகளையும் எழுதி மேற்கோடிட்டால் அதிக மதிப்பெண் பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாகும். 

விடைகளில் (.) மற்றும் (,)வை உரிய இடங்களில் கட்டாயம் போடவேண்டும். பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் முக்கியமானவை என கூறுவதை கோடிட்டு வைத்தால், தேர்வு நேரத்தில் படிப்பதற்கு எளிதாக இருக்கும். புத்தக வினாக்கள் அனைத்தையும் நன்றாக பயிற்சி செய்தால், கட்டாயம் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க முடியும்.

எழுத்துப்பிழையின்றி எழுத வேண்டும்
அனுராதா(ஆங்கிலம்): மாணவர்கள் பொதுவாகவே, மொழிப் பாடங்கள் எளிமையாக இருப்பதால், தேர்வின் போது படித்துக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர். அதனாலேயே அதிக பிழை வருகிறது. மொழிப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து தொடர் பயிற்சி எடுக்க வேண்டும். 'பத்தி' களில் வரும், முக்கிய வார்த்தைகளை கோடிடுதல் அவசியம்.

மனப்பாட பகுதியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு, கவிதையின் தலைப்பு மற்றும் கவிஞர் பெயர்களையும் எழுத வேண்டும். துணைப்பாட வினாக்களுக்கு பக்கங்களை நிரப்பாமல், அப்பாடத்தில் வரும் கதாபாத்திரங்கள், சூழ்நிலைகளை 'ைஹலைட்' செய்து எழுத வேண்டும். எழுத்து பிழையின்றி எழுத வேண்டும். விடைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதுங்கள். ஆங்கில இலக்கண விதிகளை 'டேபிள் காலம் ' அமைத்து, நாள்தோறும் பயிற்சி செய்ய வேண்டும். விடைகளை வரிசையாக எழுதுங்கள்.

கணக்கு எளிமையான பாடம்
ஈஸ்வரன் (கணிதம்): பதட்டமில்லாமல் தேர்வுக்கு செல்ல வேண்டும். எளிமையான வினாக்களை முதலில் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். விடைகளில் குழப்பம் ஏற்படும் போது, அதற்கான இடத்தை விட்டு விட்டு, அடுத்த வினாவிற்கு செல்ல வேண்டும். கணக்குகளை பலமுறை பயிற்சி செய்தால் மட்டுமே, தேர்வின் போது விரைவாக விடை எழுத முடியும். 'கணக்கு எளிமையான பாடம்' என மனதில் பதிய வைத்து, பயிற்சி செய்வதால், ஆர்வத்தோடு படிக்கலாம்.

கட்டாய வினாக்களுக்கு, விடை அறியாத பட்சத்தில், வினா எண்களையேனும் குறிப்பிட வேண்டும். கடினமாக எண்ணும் பகுதிகளிலிருந்து தினசரி இரண்டு கணக்குகளையாவது போட்டுப்பார்த்து, பயிற்சி செய்து வந்தால், தேர்வின்போது பயன்படும். 

சிந்தித்து விடையளித்தால், வெற்றி பெறலாம்
ஸ்ரீராமலு (இயற்பியல்): வினாக்களை புரிந்து சமயோசிதமாக சிந்தித்து விடை எழுத வேண்டும். எடுத்துக்காட்டு கணக்குகளை பயிற்சி செய்திருக்க வேண்டும். நாள்தோறும், இயற்பியல் விதிகளை மனப்பாடம் செய்து வந்தால், தேர்வில், விடையளிப்பது எளிதாகி விடும் பயன்பாடுகள், ஒற்றுமை வேற்றுமை, தன்மைகள் குறித்த வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். அலகுகளை மறக்காமல் எழுதுங்கள் புத்தகத்திலுள்ள அனைத்து வினாக்களையும் படித்தால் மட்டுமே, கட்டாய வினாக்களுக்கு விடையளிக்கலாம். 'டெரிவேஷன்' கணக்குகளில் விடைகளை படிப்படியாக எழுத வேண்டும்.

பாடத்தை முழுமையாக படியுங்கள்
ஸ்ரீவசந்தி (வேதியியல்): முழுமையான விடையளிக்க வேண்டும். முக்கிய விடைகளை கோடிட்டு காட்டுவதுடன், சமன்பாடுகளை எடுத்துக்காட்டுகளுடன் எழுதுதல் அவசியம். நாள்தோறும், ஐந்து சமன்பாடுகளை பயிற்சி செய்தால், தேர்வின்போது எளிமையாக இருக்கும்.

'பாயின்ட்'களாக விடை எழுதுங்கள். அதிக மதிப்பெண் வரும் பாடங்களை, முதலில் முழுமையாக படித்தால், அதிக மதிப்பெண் பெறுவது சுலபம். வேற்றுமை குறித்த கேள்விகளுக்கு, சிறுவினாக்களுக்கும் குறைந்த பட்சம் நான்கு வித்தியாசங்களை எழுத வேண்டும்.  புத்தகத்திலுள்ள வேதியியல் வார்த்தைகளை, அவ்வாறே எழுத வேண்டும்.

கலந்துரையாடினால், படித்ததை நினைவு கொள்வது எளிது ரம்யா (விலங்கியல்): வரைபட வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து படியுங்கள். 'டெக்னிக்கல்' வார்த்தைகள் உள்ள விடைகளுக்கு, அவற்றை கட்டாயம் எழுதி, மேற்கோடிடுங்கள். நாள்தோறும், குறைந்த பட்சமாக நான்கு பக்கங்களை பொழுதுபோக்காக படிக்கும் பழக்கத்தை தற்போது முதல் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்தையும் படிக்க வேண்டும். 

இணையதள முகவரி வரும் வினாக்களை கவனமாக எழுத வேண்டும். வரைபட வினாக்களில் பாகங்களை தெளிவாகவும், பிழையில்லாமலும் குறிப்பிடும்போது, முழு மதிப்பெண் கிடைக்கும்.

நாள்தோறும், குறைந்தது ஒரு மதிப்பெண் வினாக்குறித்தாவது ஆசிரியர்களுடன் கலந்துரையாடினால், படித்ததை நினைவில் வைத்துக்கொள்வது எளிதாகிவிடும்.

கையெழுத்து நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்

சுதா, (தாவரவியல்): மருத்துவ படிப்புக்கு, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். தாவர செயலியல் மற்றும் உள்ளமைப்பியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 2, 3 மற்றும் 5ம் பாடங்களில் அனைத்து வினாக்களையும் படித்து அதற்கான பதிலை தெரிந்து வைத்திருப்பது அவசியம்; தாவரவியலில் சென்டம் உறுதி. 

மலர்களின் குடும்பங்களில் வரும் வரைபடங்களை கட்டாயமாக வரைய வேண்டும். ஒரு வித்திலை, இரு வித்திலை தாவரங்களின் தண்டு மற்றும் வேர்களின் வரைபடங்கள் கட்டாயமாக பொதுத்தேர்வில் கேட்கப்படும். 5 மதிப்பெண் வினாக்களில், பெந்தம் அண்ட் ஹூக்கர், ெஹர்பேரியம் நன்மை, தீமைகள் மற்றும் அகில உலக தாவர பெயர் சூட்டு சட்டம் போன்ற வினாக்கள் மிகவும் முக்கியமானவை. 

பொதுத்தேர்வில் கட்டாயம் கேட்கப்படும், வேறுபடுத்திக் காட்டுக வினாக்களில் தான் பெரும்பாலான மாணவர்கள் தவறு செய்வர். இதைக்கவனத்தில் கொண்டு எழுதினால் முழு மதிப்பெண்கள் பெற்று விடலாம். 

செல்லியல் மற்றும் மரபியல் பாடங்களில் குரமோசோம்களின் வகைகள், செயல்பாடுகள் குறித்து, தெரிந்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதும்போது, பகுதி எண், வினா எண் மற்றும் நேர மேலாண்மை இந்த மூன்றிலும் கவனம் இருக்க வேண்டும். கையெழுத்து தெளிவாகவும், நேர்த்தியாகவும் இருந்தால் சென்டம் வாங்குவதற்கு கூடுதல் பலனளிக்கும்.

படித்து முடித்தவுடன் எழுதிப்பார்க்க வேண்டும்

மோகனப்பிரியா (கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல்): திட்டமிடுதல் மற்றும் தெளிவாக வெளிப்படுத்துதலுமே நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் எல்லோரும் தொழில் முனைவோர் ஆவதற்கு வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் மிகவும் துணைப்புரிகின்றன. 
வணிகவியலில், 40 ஒரு மதிப்பெண் வினாக்கள் உள்ளன. தேர்வுத்தாளில் முக்கியமான வார்த்தைகள் மற்றும் வரிகளுக்கு அடிக்கோடிட்டும், வண்ண பேனாக்களால் வித்தியாசப்படுத்திக் காட்டினால் முழு மதிப்பெண் வழங்கப்படும்.

20 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, துணைத்தலைப்புகள் கொடுத்து எழுத வேண்டும். அலுவலகக்கணக்கு, பங்குதாரர்கள் மற்றும் பங்குச்சந்தை போன்ற பாடங்களை முழுவதும் படித்திருப்பது அவசியம். சொந்தக்கதைகள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். எது படித்தாலும் படித்து முடித்தவுடன் எழுதி பார்த்தால் மனதில் ஆழமாக பதியும். கணக்குப்பதிவியலில் வரும் கணக்குகளை திரும்ப, திரும்ப பயிற்சி செய்து பார்த்தால் மட்டுமே சென்டம் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வெற்றிக்கான முதல் படி எவை?

மகேஸ்வரி (பொருளியல்): ஆர்வமும், விடாமுயற்சியும் வெற்றிக்கான முதல்படி. இருக்கின்ற வளத்தையும், கிடைக்கின்ற நேரத்தையும் சரியாக பயன்படுத்தினால் வெற்றி உங்கள் கைகளில். கடின முயற்சியைவிட, சிறந்த முயற்சியே உங்களுக்கு முழுமையான வெற்றியை தரும். 
நாட்டின் நாளைய பொருளாதாரத்தை நிர்ணயிப்பதே இன்று பொருளாதாரம் படிக்கும் மாணவ, மாணவியர்தான். பொருளியலில், 50 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். 50 மதிப்பெண்ணையும் முழுமையாக பெற, புத்தகத்தில் உள்ள அனைத்துப்பாடங்களையும் முழுவதுமாக படித்திருப்பது அவசியம்.

7, 10 மற்றும், 12ம் பாடங்களை முழுமையாக படித்தாலே அனைத்து, 10 மதிப்பெண் வினாக்களுக்கும் விடையளிக்கலாம். தேர்வுக்கு தயாராவதற்கு முன், தெளிவாக திட்டமிட்டும், அட்டவணை தயாரித்தும் படிக்க வேண்டும்; பயிற்சி பெறவேண்டும்.

எப்போது நேர்மறையாகவே சிந்திக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் ஒருபோதும் மனதில் தோன்றக்கூடாது. அவ்வாறு எதிர்மறையான சிந்தனைகள் தோன்றும்போது அதுவே தோல்விக்கு வழியாக அமைந்து விடும். நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். கடந்த ஆண்டு வினாக்களை தேர்வு செய்து படித்தால் முழுமையான மதிப்பெண்கள் பெற முடியும். நேர மேலாண்மை மிகவும் இன்றியமையாதது.

ஆர்வத்துடன் படித்தால் முழுமதிப்பெண் உறுதி 

திலீப்குமார், (கம்ப்யூட்டர் சயின்ஸ்): வாய்ப்பு ஒரு தடவை தான் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பாடமாக இருந்தாலும் ஆர்வத்துடன் படித்தால் மட்டுமே, முழு மதிப்பெண் பெற முடியும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், சுலபமாக மதிப்பெண் பெறலாம்; சென்டம் எடுப்பது சிறிது கடினம்.

பிற பாடத்தைபோல், இப்பாடத்தில், சென்டம் எடுப்பதற்கு தடையாக இருப்பது ஒரு மதிப்பெண் வினாக்களே. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் மதிப்பெண் பெற மட்டுமே பாடங்களை படிப்பதை தவிர்த்து, அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம்.

கம்ப்யூட்டர் புரோகிராமிங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புரோகிராமிங்கில், திறமையை வளர்த்துக் கொண்டால் 'ஐ.டி.,' துறையில் சிறந்த எதிர்காலம் மாணவர்களுக்கு உண்டு. ஒரு மதிப்பெண் வினாக்களில் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால் தினமும் பயிற்சி எடுப்பது அவசியம்.

No comments:

Post a Comment