விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பதற்கு, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. ரத்த தானம் தொடர்பாக, பொதுமக்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வும், சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், தொழிலக ஈட்டுறுதி மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 அரசு ரத்த வங்கிகள், 191 தனியார் ரத்த வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு 8 லட்சத்து 63 ஆயிரம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில், அரசு ரத்த வங்கிகள் மூலம் மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரத்த அலகுகள் சேமிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் அரசு ரத்த வங்கிகளில் பெறப்படுகின்ற மொத்த ரத்த அலகுகளில் 99 சதவீதம் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் பெறப்படுகின்றன. இதனால், தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளின் மூலம் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 118 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், ஓராண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்யும் ஆண்களுக்கும், இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களுக்கும் பதக்கமும், பாராட்டுச் சான்றையும் தமிழக அரசு அளிக்கிறது.
நிகழாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 சதவீதம் இலக்கை எய்தவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கவும், பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment