Pages

Tuesday, October 6, 2015

மருத்துவ கல்லூரியில் சேர வருகிறது நுழைவுத்தேர்வு?

பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை, பல்வேறு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. சில மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தனியார் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஆகியவை, தனியாக நுழைவுத் தேர்வு நடத்துகின்றன.'மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.

2009ல், கேதன் தேசாய், எம்.சி.ஐ., தலைவராக இருந்தபோது, இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோர்ட் தலையிட்டதால், இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து, எம்.சி.ஐ., பொதுக் குழு கூட்டத்தில், சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வை நடத்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதுகுறித்து, எம்.சி.ஐ., தரப்பில், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து, பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்த முடிவை, விரைவில் அறிவிக்கவுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment