Pages

Tuesday, November 24, 2015

கன்னியாகுமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு தமிழகம் முழுவதும் பரவலாக மழை


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி தொடங்கியது.

அப்போது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.


இதன் காரணமாக, பலத்த மழை பெய்த பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள குளங் கள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பின. பல இடங்களில் படிப்படியாக நிரம்பி வருகின்றன.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தற்போது அது கன்னியாகுமரி கடல் பகுதியில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை) மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரிக்கடல் பகுதியில்...

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நேற்று (நேற்று முன்தினம்) உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை, இன்று (நேற்று) காலை 8.30 மணி நேர நிலவரப்படி, மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலையாக நீடிக்கிறது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையோ அல்லது மிக கனமழையோ இருக்கக்கூடும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

படிப்படியாக குறையும்

சென்னையை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்வதால், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இல்லை.

வரக்கூடிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை இருக்கும். வருகிற 25-ந்தேதி(புதன்கிழமை) முதல் இந்த மழை அளவு படிப்படியாக குறையும்.

No comments:

Post a Comment