Pages

Thursday, November 19, 2015

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'தமிழகத்தில் வங்கி பணிகள் ஸ்தம்பிக்கும்



ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில், 1,100 பேர் உட்பட, நாடு முழுவதும், 17 ஆயிரம் ஊழியர்கள், இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.


இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தெரிவித்ததாவது:ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், எதிர்காலத்தில், ரிசர்வ் வங்கியே இருக்காதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுபோல், ரிசர்வ் வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுவதே இல்லை.இந்த காரணங்களுக்காக, நாடு முழுவதும், 17 ஆயிரம் ரிசர்வ் வங்கி ஊழியர்கள், இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்; தமிழகத்தில், 1,100 ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
காசோலைகளை ரிசர்வ் வங்கி தான், 'கிளியரிங்' செய்ய வேண்டும். அப்பணி இன்று நடைபெறாது என்பதால், தமிழக அரசு துறைகள் மற்றும் தனியாரின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பாதிக்கும். நாங்கள் ஒப்புதல் அளித்தால் தான், உரிய வங்கி கணக்குக்கு பணம், 'ஆன்லைனில்' பரிமாற்றம் செய்யப்படும்; அதனால், அச்சேவையும் பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment