தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (செப்.1) தொடங்க உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வரும் அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்களும், 100 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு இரண்டு கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்தாய்வின் முடிவில் சேர்க்கைக் கடிதம் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்ககம் விதித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:
மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வர வேண்டும்.
ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போன்ற ஆடைகளை மாணவர்கள், மாணவிகள் அணிந்து வரக்கூடாது. அவ்வாறு உடை அணிந்து வரும் மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவிகள் தலைமுடியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் கண்ணியத்துடன் தோற்றம் அளிக்க வேண்டும். அதனாலேயே ஆடைகளில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர, "ராக்கிங்' போன்ற செயல்களில் ஈடுபட்டால் கல்லூரியில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment