Pages

Wednesday, September 23, 2015

கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது

நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக தகவல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் வசதி உள்ளதால், நல்லதோ, கெட்டதோ.., அவை நொடிப் பொழுதில் பலருக்கும் பரவி விடுகிறது.




இவை குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும், சில குற்றச் செயல்களுக்கு தூண்டுகோலாகவும் இது விளங்குகிறது வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் அனைத்து விஷயங்களையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஒழுங்குப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கென புதிய வரைவு கொள்கையும் உருவாக்கியது. இதுதொடர்பாக, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும், புகைப்படங்கள், வீடியோக்களை (தனிப்பட்ட உரையாடல்கள் உட்பட) கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டியதும் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. வரைவுநிலையில் மட்டுமே இருந்த இத்திட்டம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த கண்காணிப்பு திட்டத்துக்கு இணையதள பயனாளர்கள் மற்றும் மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், வாட்ஸ்அப் வாயிலாகவும் இந்த முடிவை கண்டித்து கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

இதனையடுத்து, தனது நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. வாட்ஸ்அப்க்கு விதிக்க இருந்த கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment