Pages

Friday, September 25, 2015

கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு, டில்லியில், டிச., 8 முதல், 10ம் தேதி வரை தேசிய போட்டி; 11ம் தேதி பரிசளிப்பு மற்றும் கலை விழா நடக்கிறது. தேசிய போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு, முதல் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலமும், தங்களின் பாரம்பரிய கலைகளை பட்டியலிட்டு, இசை, நாடகம், ஓவியம், நடனம் என, நான்கு விதமான போட்டிகள் நடத்தி, தேசிய போட்டிக்கு, மூன்று குழுவை தேர்வு செய்ய வேண்டும்.

பாரம்பரிய நடனம் உ.பி., - ராமலீலா, மிசோராம் - செராவ் நடனம், காஷ்மீர் - ரப் நடனம், மேற்கு வங்கம் - ஜாத்ரா, கேரளா - புல்லுவன் பாட்டு மற்றும் தமிழக நாட்டுப்புற கலைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட, மாநில போட்டிகளை நடத்தி, தேசிய விழாவுக்கான அணியை தேர்வு செய்ய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழக நாட்டுப்புற கலைகளான, ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பாவைக்கூத்து எனப்படும் பொம்மலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உறியடி விளையாட்டு, தப்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், பொம்மை கலைகள் மற்றும் கோலக் கலை போன்ற, பல தமிழ் பாரம்பரிய கலைகளை தேர்வு செய்து, மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை, அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிஉள்ளது

No comments:

Post a Comment