தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.நிரஞ்சன், "வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்சமாக குடிநீர், கழிவறை உள்ளிட்ட 7 அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க அடையாளம் கண்டுள்ளது. அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்ட கழிப்பிட வசதியை பெண் காவலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 65,512 வாக்குச் சாவடிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள், காவலர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். தேர்தல் ஆணையம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்று நாங்கள் கூறியதாக கருதக் கூடாது என்றனர். இதையடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment