Pages

Monday, April 11, 2016

சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா: ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 13-ந்தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி பேட்டி


சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக 13-ந் தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி கூறியுள்ளார்.

தொடர் தர்ணா

சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூருவில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்-மந்திரி சித்தராமையா ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கடந்த சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தினார். தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவர்களின் நலன் கருதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.


ஆனால் முதல்-மந்திரி விடுத்த வேண்டுகோளை ஆசிரியர்கள் நிராகரித்துவிட்டனர். ஆசிரியர்கள் தங்களது காலவரையற்ற தர்ணா போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த காலத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மாணவ-மாணவிகளை அச்சம் அடைய செய்துள்ளது.

தோல்வியில் முடிந்தது

இந்த நிலையில் கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் நேற்று 2-வது முறையாக போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை அழைத்து பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆசிரியர்கள் சங்க தலைவர் திம்மையா புர்லே உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள சர்வசிக்ஷ அபியான் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

இதில் பேசிய மந்திரி கிம்மனே ரத்னாகர், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியர்கள் சங்க தலைவர் திம்மையா புர்லே பேசும்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் எந்த தீர்வும் காணப்படாமல் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.

13-ந்தேதி அறிவிக்கப்படும்

இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி கிம்மனே ரத்னாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல் உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வருகிற 13-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்.

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்திற்கான வினாத்தாள் கடந்த மாதம் 21-ந் தேதி வெளியான விவகாரத்திற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய நான் முடிவு செய்தேன். ஆனால் பிரச்சினையை தீர்க்காமல் மந்திரி கோழைத்தனமாக ஓடி ஒளிந்து கொண்டார் என்று கூறிவிடுவார்கள் என்ற காரணத்தால் நான் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கினேன்.

இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.

காலவரையற்ற உண்ணாவிரதம்

இதுபற்றி ஆசிரியர் சங்க தலைவர் திம்மையா புர்லே கூறும்போது, “அரசுடன் இன்று(நேற்று) பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. 13-ந் தேதி முடிவை அறிவிப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாங்கள் அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம். நாங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடவில்லை. எங்கள் கோரிக்கையை தீர்க்காவிட்டால், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தும்போது இன்னும் பிரச்சினைகள் அதிகரிக்கும்“ என்றார்.

No comments:

Post a Comment