Pages

Friday, April 15, 2016

இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக வெப்பம் !


இந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி வெப்ப அலை வீசுவதால், இந்த கோடைகாலம் வழக்கத்தைவிட கடுமையானதாகியிருக்கிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் காரணமாக சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் திங்கட்கிழமையன்று 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஏப்ரல் மாதத்தில் இந்த அளவு வெயில்
அந்நகரத்தில் இருந்தது இதுவே முதல் முறையாகும்.
பருவமழைக்கு முன்பாக இந்தியா முழுவதும் நல்ல வெயில் இருப்பது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெயில் அடித்துவருகிறது. அதுவும் குறித்த காலத்திற்கு முன்பாகவே கடும் வெப்பம் நிலவுகிறது.



வட இந்தியாவின் பெரும் பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பம் நிலவிவருகிறது.
இந்தியாவின் உட்புறப் பகுதிகளிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக கொல்கத்தா, புவனேஸ்வர் ஆகிய நகரங்கள்கூட வெப்பத்தில் தகிக்கின்றன. வழக்கமாக வங்கக் கடலில் இருந்து வீசும் கடல் காற்றின் காரணமாக இந்நகரங்களில் வெப்பம் சற்று தணிந்திருப்பது வழக்கம்.
2015ல் நிலவிய எல் நினோவின் காரணமாக, இந்தியாவின் உள் பகுதிகளில் பருவமழை குறைவாகவே பெய்தது.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழையில் பாதிக்கும் சற்று அதிகமாக மட்டுமே மழை பெய்தது.
விரைவிலேயே மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலும் வெப்பநிலை குறையுமென தெரிகிறது. இருந்தபோதும், கோடை காலத்தின் மிக வெப்பமான மாதங்கள் இனிமேல்தான் வரவிருக்கின்றன.
ஜூன் மாதத்தின் மத்தியில் பருவமழை துவங்கிய பிறகுதான் இந்த வெப்பத்திலிருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment