Pages

Tuesday, April 5, 2016

ஜூன் 1ல் புத்தக கண்காட்சி துவக்கம்


'சென்னை தீவுத்திடலில், வரும் ஜூன், 1ம் தேதியில் இருந்து, 13ம் தேதி வரை, 39வது புத்தக கண்காட்சி நடக்க உள்ளது' என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன், செயலர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஜி.ஒளிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கடந்த, 2015 டிசம்பரில் பெய்த கனமழையால், தமிழ் புத்தக விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதனால், ஜனவரியில் புத்தக கண்காட்சியை நடத்த முடியவில்லை.


வரும், ஜூன், 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 39வது சென்னை புத்தக கண்காட்சி, தீவுத்திடலில் நடைபெற உள்ளது. அதில், 800க்கும் மேற்பட்ட அரங்குகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், அனைத்து மொழி புத்தகங்களும் இடம்பெறுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


 இந்த ஆண்டில், புத்தக கண்காட்சி தொடர்பாக, சிறப்பு தபால் தலை வெளியிடப்படும்.

வித்தியாசமான கலை நாட்கள்

ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், மகளிர் தினம், பாரம்பரிய கலைகள் தினம், இளைஞர் தினம், படைப்பாளிகள் தினம், ஊடக தினம், சென்னை தினம் ஆகியவை கொண்டாடப்படும்.

குறிப்பிட்ட தினங்களில், அவர்களுக்கான நுால்கள் முன்னிலைப்படுத்தப்படுவதோடு, அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், துறை வல்லுனர்களோடு வாசகர்கள் கலந்துரையாட, வாய்ப்புகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு, சிறுகதை, ஓவியப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்படும்.

 மாடித்தோட்டம்

இயற்கை வழி மாடித்தோட்டம் அமைக்க, வாசகர்களை ஊக்கப்படுத்தும் வகையில், விதைகள், பைகள், உரங்கள் மற்றும் தொழில்நுட்ப

ஆலோசனைகள் வழங்கப்படும்.

 அலமாரி உண்டு

புத்தகங்கள் வைக்க இடமில்லாதோருக்காக, 'வீட்டு நுாலகம்' என்ற பெயரில், சுவரில் மாட்டி, கழற்றும் வகையிலான புத்தக அலமாரிகளின் விற்பனையும் உண்டு. அதில், 60 புத்தகங்கள் வரை வைக்க முடியும்.

 சமூக வலைதளங்களில்...

புத்தக காட்சி குறித்த, அவ்வப்போதைய நிலவரம் குறித்து, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

 வெளிநாடு வாழ் எழுத்தாளர்கள்

இந்த ஆண்டு முதல், வெளிநாடு வாழ் எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்காக புதிய அரங்கு அமைத்து, அவர்களின் நுால்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதோடு, அவர்களுடனான கலந்துரையாடலுக்கும், வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, சிங்கப்பூர் எழுத்தாளர்களும், அடுத்த ஆண்டு, இலங்கை எழுத்தாளர்களும் கவுரவிக்கப்படுவர். தேசிய கலை மன்றத்தின் மூலம் இவை நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு, 15 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


நேரம்

விடுமுறை நாட்கள்

காலை, 11:00 - இரவு, 9:00

வார நாட்கள்

பகல், 2:00 - இரவு, 9:00 மணி


கட்டணம்

சென்னை மாணவர்கள் /12 வயதுக்கு

உட்பட்டோருக்கு - இலவசம்

பெரியவர்களுக்கு - ரூ.10

இலவசம்

5,000க்கும் மேற்பட்ட

வாகனங்களை நிறுத்தலாம்.

வாகன நிறுத்த

கட்டணம் கிடையாது.

No comments:

Post a Comment